சேலம் அருகே பயங்கரம் கம்பியால் அடித்து ஓட்டல் அதிபர் கொலை: வாலிபர் வெறிச்செயல்

சேலம்: சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (60). இவர், தனது மகன் நாகராஜியுடன் அரியானூர் பகுதிக்கு குடிபெயர்ந்து, அங்கு டீக்கடை வைத்துள்ளார். இச்சூழலில் அரியானூர் குட்டக்காடு பகுதியில் உள்ள தாபா ஓட்டலை நடத்தியவரின் குத்தகை காலம் முடிந்துள்ளது. இதனால், அந்த தாபா ஓட்டலை எடுத்து நடத்த கந்தசாமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து தாபா ஓட்டலை சீர்படுத்தும் பணியை கந்தசாமி செய்து வந்தார். இதற்காக தினமும் 5 தொழிலாளிகள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடையை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோசப் (24) உடனிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். சமையல் மாஸ்டரான அவர், தாபா ஓட்டல் கூரை போடப்பட்டபின், அங்கேயே வேலைக்கு சேர்ந்துவிடலாம் என பணியாற்றியுள்ளார். பகலில் வேலை பார்க்கும் தொழிலாளிகள், மாலையில் வீடு திரும்பியதும் கந்தசாமியும், ஜோசப்பும் அங்கேயே படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்றிரவும் இருவரும் அங்கே படுத்து தூங்கியுள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் கந்தசாமிக்கும், ஜோசப்பிற்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், அங்கிருந்த கம்பியை எடுத்து கந்தசாமியின் தலையில் பலமாக ஜோசப் தாக்கியுள்ளார்.

சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழவும், அங்கிருந்து ஜோசப் தப்பியுள்ளார். பிறகு அவரது மகன் நாகராஜிக்கு போன் செய்து, உங்கள் தந்தை காயமடைந்து கிடக்கிறார் எனக் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ் மற்றும் உறவினர்கள் சம்பவ இடம் சென்று பார்த்துள்ளனர். அங்கு கந்தசாமி கொலையுண்டு கிடந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து கந்தசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், கந்தசாமியை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது மகன் நாகராஜிக்கு தகவல் கொடுத்து விட்டு ஜோசப் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று காலை, கந்தசாமியை அடித்துக் கொன்ற ஜோசப் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்றிரவு தாபா ஓட்டலுக்கு குடிபோதையில் ஜோசப் வந்துள்ளார். அங்கு நள்ளிரவு கந்தசாமி தூங்கியதும், அங்கிருக்கும் பொருட்களை திருடிக் கொண்டு செல்ல ஜோசப் முயற்சித்துள்ளார். அதனை பார்த்த கந்தசாமி, தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜோசப், கந்தசாமியை கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: