பருப்பு, பாமாயில் இறக்குமதியில் வரிஏய்ப்பு செய்த விவகாரம்; 5 நிறுவனங்களில் விடிய விடிய 2வது நாளாக சோதனை: பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் சிக்கின

சென்னை: பொது விநியோக திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக காமாட்சி அண் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் விடிய விடிய 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகளின் பொது விநியோக திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் என 5 பெரிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த 5 பெரிய நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு தேவையான அனைத்து வகையான பருப்பு மற்றும் பாமாயிலை மொத்தமாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து மண்டல வாரியாக பிரித்து பொது விநியோக திட்டத்திற்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், பொது விநியோக திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் கொள்முதல் செய்யும் வகையில் காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பல டன் அளவுக்கு மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். அப்படி கொள்முதல் செய்த பருப்பு மற்றும் பாமாயில் தொடர்பான பல நூறு கோடி கடந்த 2 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்ததாக தெரியவந்துள்ளது. துறைமுகத்தின் வழியாக கொடுக்கப்பட்ட இறக்குமதி கணக்கு மற்றும் இறக்குமதி செய்த காமாட்சி அண் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் கொடுத்த ஆண்டு கணக்கில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.

அதைதொடர்ந்து சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள காமாட்சி அண் கோ நிறுவனத்தின் குடோன் மற்றும் அதன் உரிமையாளர் வீடு, காமாட்சி அண்ட் ேகா நிறுவனத்தின் கணக்காளர் வீடு, மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் நிறுவனம், தண்டையார் பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழுகிணறு பகுதியில் உள்ள ஹிராஜ் டிரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகிரேடட் சர்வீஸ், அண்ணாநகரில் உள்ள அலுவலகங்களில் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நேற்று அதிகாலை முதல் சோதனை நடந்து வருகிறது.

விடிய விடிய நடந்த சோதனையில், 5 நிறுவன உரிமையாளர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத ரொக்க பணம், தங்க நகைகள், பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்து இருப்பதற்கான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த போலி நிறுவனங்கள் அனைத்து பினாமிகள் பெயரில் தொடங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதி செய்வதாக கணக்கு காட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் காமாட்சி அண்ட் கோ மற்றும் அருணாச்சலம் இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், ஹிராஜ் டிரேடர்ஸ், இண்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் ஆகிய நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அதன் பங்குதாரர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் தான் போலி நிறுவனங்கள் குறித்தும், அதன் உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் தகவல் தெரியவரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொது விநியோக திட்டம் என்பதால் பல கோடி அளவிற்கு நேரடியாக முதலீடு செய்துள்ளனர்.

இதனால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் 2021-22 காலாண்டில் அளித்த வருமான வரிக்கணக்குடன் ஒப்பிட்டு கணக்காய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும், அதன் பிறகே பருப்பு மற்றும் பாமாயில் இறக்குமதியில் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்று முழுமையாக தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்களில் 2வது நாளாக நடந்து வரும் சோதனையால், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மற்றும் பருப்பு பாக்கெட் போடும் குடோன்களில் பணியாற்றும் ஊழியர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் வழக்கம் போல் இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: