ஐரோப்பிய நாடாளுமன்றம் முட்டாள்களின் கூடாரம்: பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அறிவித்த நிலையில் ரஷ்யா விமர்சனம் .!

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா பயங்கரவாத்தை ஆதரிக்கும் நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தொடுத்து வரும் போர் 274வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ரஷ்யாவிடம் பறிகொடுத்த பகுதிகளை உக்ரைன் ராணுவம் முழுவீச்சுடன் தாக்குதல் நடத்தி ஒவ்வொன்றாக மீட்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி, ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் சர்வதேச விதிகளை மீறி உக்ரைனில் அப்பாவி மக்கள், எரிசக்தி, உள்கட்டமைப்பு மருத்துவமனைகள், அரசின் முகாம்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாகவும், ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஐரோப்பியாவை போன்று அமெரிக்கா மற்றும் பிற நாடுகளும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்ட மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பணிகள் முழுவீச்சாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை பயங்கரவாத நாடுகளில் பட்டியலிடும் அமெரிக்காவின் இரு அவைகளிலும் வலியுறுத்திய போதும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் இதுவரை பட்டியலிட மறுத்துள்ளார். அதே சமயம் கியூபா, வடகொரியா, ஈரான், மற்றும் சிரியான் நாடுகளை பயங்கரவாதத்துக்கு ஆதரவான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ஐரோப்பிய நாடாளுமன்றம் முட்டாள்களின் கூடாரமாக இருக்கிறது என முன்மொழிவதாக கூறியுள்ளார்.

Related Stories: