நரிக்குடி அருகே கண்மாய் நிறைந்து வயல்களுக்குள் புகுந்த மழைநீர் நெல் பயிர் முழுவதும் மூழ்கி நாசம்: விவசாயிகள் கவலை

காரியாபட்டி: நரிக்குடி பகுதியில் மேலபருத்தியூர் கண்மாயில் நீர் நிரம்பி வெளியேறும் தண்ணீர் விளக்குசேரி கிராம விளைநிலங்களுக்குள் நீர் புகுந்ததால் நெல் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. நரிக்குடி அருகேயுள்ள விளக்குசேரி  கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியிலுள்ள கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஆவணி மாதம் விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளை தொடங்கிய நிலையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதன் காரணமாகவும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் வயலில் களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், போன்ற பல்வேறு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வைகை அணையின் நீர்திறப்பால் கிருதுமால் நதியிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட  நிலையில் பெரும்பாலான கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி வருகிறது.

இதனையடுத்து அங்காங்கே சில கண்மாய்களில் உடைப்பும் ஏற்பட்டது. இதனால் நீர்வரத்து காரணமாக மேல்பருத்தியூர் கண்மாய் நிரம்பிய நிலையில் மேற்பரப்பில் தண்ணீர் வெளியேறி கண்மாய் தண்ணீர் அனைத்தும் அருகிலுள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்தது.

இதனால் விளக்குசேரி கிராமத்தில் விவசாயம் செய்துள்ள சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு நெல் பயிர்கள் அனைத்தும் கண்மாய் நீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவுகள் செய்து, அடுத்த இரண்டு மாதங்களில் அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் சேதமடைந்ததால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும்  சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: