மானாமதுரையில் ஆக்கிரமிப்பால் சுருங்கி வரும் வண்ணான்குளம்: நடைபாதை, பூங்கா அமைக்க கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரையில் உள்ள வண்ணான்குளம் கண்மாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், கரையை பலப்படுத்தி நடைபாதை, பூங்கா அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரையில் அரசு மருத்துவமனைக்கு முன்புறம் 300 ஏக்கர் பரப்பளவில் வண்ணான்குளம் என்ற கண்மாய் அமைந்துள்ளது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாய நிலங்களின் நீராதாரமாக இருந்தது. மழைநீர் சேகரமாகும் நீர்பிடிப்பு பகுதிகள், வரத்துகால்வாய் ஆக்கிரமிப்பு, பருவநிலை மாற்றம், போதிய மழையின்மை ஆகிய காரணங்களால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது படிப்படியைகா குறைந்தது. தொடர்ந்து ஆக்கிமிப்பாளர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்ததால், தற்போது கண்மாய் இருந்த இடமே தெரியாமல் போயுள்ளது.

இந்த கண்மாயை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளும், நிலங்களை விற்றுவிட்டு பிழைப்புக்காக வெளியூர் சென்றுவிட்டனர். விளைநிலங்களை வாங்கியவர்கள் அனைத்தையும் பிளாட் போட்டு விற்றனர். நிலங்கள் வீடுகளாகின. கண்மாய் நீர்வெளியேறும் பகுதியில் குடியிருப்புகளை கட்டியதால் மழைகாலங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மிதக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வண்ணான்குளம் கண்மாயை மீட்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை நகராட்சியாக மாற்றப்பட்டுள்ள நிலையில் நகர் சீரமைப்பு பட்டியலில் வண்ணான்குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை தூர்வாரி நடைபாதை பூங்கா அமைக்கவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில், ”முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்ணான்குளம் கண்மாய் மூலம் ஏராளமான வயல்களில் நெல் சாகுபடி நடந்தது. கழிவுநீர் கண்மாய்க்குள் சென்றதுடன் கண்மாயை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் நடந்ததால் சிறிது சிறிதாக கண்மாயின் பரப்பளவு சுருங்கியுள்ளது. பேரூராட்சியாக இருந்தபோது இந்த பகுதியில் சட்டவிரோதமாக வீடுகட்டியவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வரத்துக்கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளதால் கண்மாயின் உள்ளே கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. அரசு மருத்துவமனை வழியாக வரும் கழிவுநீர் கண்மாய்க்குள் செல்கிறது. இதனால் கண்மாயில் நிரம்பியுள்ள தண்ணீரின் மேல் பகுதி முழுவதும் பாசி படர்ந்து காணப்படுகிறது. எனவே கழிவுநீரை வேறுபகுதிக்கு திருப்பிவிடவேண்டும். மீண்டும் கழிவுநீர் மற்றும் குப்பைகள் சேராத வகையில், பழைய கண்மாய் சீரமைக்கப்பட வேண்டும்” என்றார். இதேபோல், சமூக ஆர்வலர் பிரபாகரன் கூறுகையில், ”வண்ணான்குளம் கண்மாய்க்குள் இருக்கும் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும், கண்மாய்க்குள் கழிவுநீர், குப்பைகள் சேர்வதை தடுக்க வேண்டும், கருவேல மரங்களை அகற்றுவதுடன்,

மழைநீர் வரத்து கால்வாயை சீரமைத்து முழு கொள்ளளவுக்கும் மழைநீரை நிரப்பினால் குலாலர் தெரு, பட்டரைத்தெரு, முல்லை நகர், குறிஞ்சி நகர், கள்ளர் தெரு, மருதுபதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் நிலத்தடிநீர் மட்டம் உயரும். முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு நடைபாதையும், சிறுவர்களுக்கு பூங்காவும் அமைத்தால் நகரில் பொழுதுபோக்கு அம்சமாக வண்ணான்குளம் மாறும். இப்பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories: