கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

காடையாம்பட்டி: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, காடையாம்பட்டியில் மண்ணாலான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில், பெண்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில், மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் மண்ணால் ஆன பானை, சட்டி, அடுப்பு, அகல்விளக்கு, குதிரை, யானை, நாய் உள்ளிட்ட பொம்மைகளை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தை பொங்கல் மற்றும் கோடை காலங்களில் மன்பானை செய்வது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள் செய்வது, திருவிழா காலங்களில் பொம்மைகள் செய்வது என சீசனுக்கு ஏற்றார்போல், மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது.

தீபத்திருவிழாவிற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், காடையாம்பட்டி பகுதியில் தற்போது அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குடிசைத்தொழில் போல் இதை மேற்கொள்ளும் இவர்கள் இரவு, பகலாக அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாராகும் அகல் விளக்குகளை, வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்.

ஒரு விளக்கு 70 காசு வீதம் மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து வாங்கிச் செல்லும் அகல் விளக்குகளை ஓமலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். நடப்பாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன. அதைப்போல், கார்த்திகை தீபத்திருவிழாவை எதிர்நோக்கி, அகல்விளக்குகள் விற்பனையும் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கையில், அகல்விளக்குகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: