×

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம்; சேலம் கோட்டத்தில் 21,120 பேர் சிக்கினர்: ரூ.1.69 கோடி அபராதம் வசூல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில், கடந்த மாதத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 21,120பேரிடம் இருந்து ரூ.1.69 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 21ஆயிரத்து 120 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரயில்வே சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1.69 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த மாதம் ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகையை யொட்டி நடத்திய சோதனையில் சேலம் கோட்டத்தில் டிக்கெட்  இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகளவு அபராதம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், ‘‘சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1.69 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த மாதம் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட  அனைத்து ரயில் நிலைய பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், டிக்கெட் இல்லாமல் சென்ற 21,120 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Tags : Salem , Ticketless travel by train; 21,120 people caught in Salem zone: Rs 1.69 crore fine collected
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...