×

பரமக்குடி,கமுதி பகுதியில் வைகையில் தண்ணீர் வந்தும் நிரம்பாத கண்மாய்கள்: வீணாக கடலில் கலக்கும் நீர்

பரமக்குடி:  தொடர்ந்து மழை பெய்தும் வைகை ஆற்றில் தண்ணீர் வந்தும் 23 கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளது. இதனால் பசான கால்வாய்களை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பாசன பகுதிகள் அதிகம் உள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணை முழுமையாக நிரம்பி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் தொடர்ந்து கடலில் கலக்கிறது. இந்நிலையில், பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது இடது பிரதான கால்வாய்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. வைகை ஆற்றில் கல்லியடிந்தல் அருகில் பிரியும் கால்வாயில் 2 கிலோ மீட்டர் வரை மண் திட்டுகள் உருவாகியுள்ளன. இவை அகற்றப்படாமல் உள்ளதால் அக்கிரமிசி, வல்லம், பகை வென்றி, அஞ்சாமடை, தவளைகுளம், நாகாச்சி, குளத்தூர், அரசடி வண்டல், காவனூர் நயினார்கோவில், கரைமேல் குடியிருப்பு,வானியவல்லம் உட்பட 23 கண்மாய்களுக்கு தண்ணீர் எட்டி பார்க்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயி ராமன் கூறுகையில், அக்கிரமசி உள்ளிட்ட 23 கண்மாய்களில் பல ஆயிரம் ஏக்கர் விலை நிலங்களில் நெல் பயிரிட முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பகுதிகளில், மலை பொழிவு குறைவாக உள்ளதால் கண்மாய்க்கு நீர் கிடைக்காததால் அனைத்து வகை விளைச்சலும் செழிக்க உதவும் என்றார்.

மாவட்ட பூர்வீக வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி கூறுகையில்” கடந்த மூன்று மாதங்களாக பல ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்தாலும் அதுபோன்ற மண் திட்டுகளால் பல கண்மாய்கள் நிரம்பாத நிலை உள்ளது. மேலும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆகவே கலெக்டர் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சமூக ஆர்வலர் செல்வம் கூறுகையில் “பொதுப்பணி துறையினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்மாய்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களில் உள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் திட்டுக்களை அகற்றுவதற்கான ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதுபோல் கமுதி மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் பெயரளவிற்கு மட்டுமே மழை பெய்தது. இதனால் கீழராமநதி தலைவயநாயக்கன்பட்டி, உடைகுளம், புளிச்சிகுளம், கே.நெடுங்குளம்,நெருஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, பேரையூர், சேர்ந்தகோட்டை, கீழவலசை, செங்கோட்டைபட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் நெற்பயிர் மற்றும் மிளகாய் உட்பட பல பயிர்கள் கருகி வருகின்றன.

இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயம் வீணாகி போன நிலையில், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள ஏராளமான கண்மாய், ஊரணிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல் குண்டாறு, மலட்டாறு, பரளையாறு, கிருதுமால் நதி போன்ற ஆறுகளும் கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளும் குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றன. இதேபோல் வனப்பகுதியில் சுற்றித்திரியும் மான், மயில், நரி போன்ற வன விலங்குகளும் குடிக்க தண்ணீர் இல்லாமல் குடியிருப்புகளை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகி உள்ளது.

Tags : Paramakkudi, ,Kamudi ,Vaigai ,Kanmais , In Paramakkudi, Kamudi area, water comes to Vaigai, but not filled kanmais: water gets mixed with sea
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி