×

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை: எல்லை தாண்டி வந்ததாக ஜிபிஎஸ் வரைபடம் வெளியீடு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கடந்த 5 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. நேற்று நிலைமை சீரான நிலையில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடி தொழிலுக்கு கிளம்பினர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

5 விசைப்படகுகளில் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி எரிந்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிக்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்றும் இலங்கை கடற்படையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு 50,000 ரூபாய் வரை இழப்புடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் வந்து மீன்பிடித்ததாக ஜிபிஎஸ் வரைப்படத்தை இலங்கை கடற்படை வெளியிட்டுள்ளது.


Tags : Rameswaram ,Kachativu , Rameswaram fishermen chased away by Sri Lankan Navy near Kachchathivu: GPS map released
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...