×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மகா தீபம், பெளர்ணமியை முன்னிட்டு டிசம்பர் 6,7 தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழா கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. சாமி உலா, தேரோட்டம் ஆகியவை கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு உள்ளதால் வழக்கம் போல் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி கோவிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மகா தீபத்தை காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்து உள்ளது.

Tags : Tamil Nadu ,Thiruvandamalai ,Dipadiruviruvilla ,Department , 2,700 special buses to operate across Tamil Nadu on the occasion of Tiruvannamalai Deepatri Festival: Transport Department Notification
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...