6 பேர் விடுதலையில் நீதிமன்றம் கண்டனம் ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும்: நெல்லையில் முத்தரசன் ஆவேசம்

நெல்லை: உச்சநீதிமன்றம் கண்டனத்தை ஏற்று தார்மீக அடிப்படையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். நெல்லையில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை சிந்துபூந்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

 பாஜ  இந்தியாவை தாங்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறது. இதற்காக தமிழகம், கேரள மாநிலங்களில் ஆளுநரை கொண்டு போட்டி அரசாங்கம் நடத்த ஒன்றிய அரசு முற்படுகிறது. தமிழக ஆளுநரின் பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு உள்ளது. ஆளுநரின் கருத்துக்கள் மத ரீதியாக இருப்பதோடு, சனாதனத்தை ஆதரித்து பேசுகிறார். இதனை வைத்து அவரை நீக்கம் செய்திருக்க வேண்டும்.

தமிழக மக்களின் நலன் சார்ந்த 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலைவரைப் போல் செயல்பட்டு வருகிறார். மோடி அரசு அவரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

 6 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது பணியை சரியாக செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆளுநர் தனது மரியாதையை இழந்துள்ளார். எனவே தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படுவோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: