செல்போனை பறிக்கும் முயற்சி சென்னை இளம்பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிய வாலிபர்:காட்பாடி அருகே பரபரப்பு

வேலூர்: ஓடும் ரயிலில் செல்போன் பறிக்கும் முயற்சியில் சென்னை இளம்பெண்ணை தள்ளிவிட்டு தப்பிய வாலிபரை காட்பாடி ரயில்ேவ போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் பேசஞ்சர் ரயிலில் நேற்று முன்தினம் மாலை வேலூருக்கு வந்தார். அப்போது, காட்பாடி அடுத்த ஜாப்ராப்பேட்டை அருகே ரயில் மெதுவாக சென்றது. அங்கு பெண் பயணிகள் பெட்டியில் மர்ம ஆசாமி ஒருவர் ஏறினார்.

அவர் திடீரென இளம்பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட இளம்பெண் செல்போனை விடாமல் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால் அந்த வாலிபர், இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு, அவரும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். இதில் ரயிலில் இருந்து தண்டவாளம் அருகே விழுந்து காயமடைந்த இளம்பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் மெதுவாக சென்றதால், இளம்பெண் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பிய வாலிபர் குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூரை சேர்ந்த ஹேமராஜ்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று காலை அவரை கைது செய்தனர்.

Related Stories: