×

செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: குற்றாலம் உட்பட பல்வேறு பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள அருவிகள் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. பொருளாதார ரீதியாக வசதிமிக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நோக்கில், இங்கு ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இவற்றில் அருவிகளின் நீர்வழிப்பாதையை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சிகளை உருவாக்கியுள்ளனர்.  இதனால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதேபோல், குமரி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் உள்ளன. எனவே,  இயற்கை நீரோட்டத்தை மாற்றி, செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர், ‘‘செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான ஏராளமான புகைப்படங்கள், இணையதள முகவரிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இயற்கை அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் 2 நாட்களில் குழு அமைக்க வேண்டும். இக்குழு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதில், செயற்கை நீர்வீழ்ச்சிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொகுசு விடுதிகளுக்கும் சீல் வைக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்தனர்.

Tags : iCourt , Artificial waterfall, luxury hotel, high court branch in action
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு