சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த அடிதடி சம்பவம் தொடர்பாக நோட்டீஸ் பெற்றவரான எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமாரிடம் விசாரணை நடத்த காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இன்று கூடுகிறது. ரூபி மனோகரன் கடிதம் கொடுத்துள்ளதால், ரஞ்சன் குமாரிடம் இந்த குழு இன்று விசாரணை நடத்துகிறது. சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது, மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.
மோதலை தொடர்ந்து, 62 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ரூபி மனோகரன் எம்எல்ஏக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.
அதை தொடர்ந்து, கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமாருக்கும் அந்த குழு நோட்டீஸ் அனுப்பியது. இருவரும் வரும் 24ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணை இன்று சத்தியமூர்த்திபவனில் காலை 10.30மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ரூபி மனோகரன் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பிய கடிதத்தில்,‘‘தவிர்க்க முடியாத சில காரணங்களால் நான் நேரில் வந்து விளக்கம் தர, 2 வாரம் கழித்து மாற்று தேதி வழங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் இந்த குழு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரும் விளக்கத்தை பொறுத்து யார் மீது நடவடிக்கை பாயும் என்பது தெரிய வரும்.
திட்டமிட்டபடி நடக்கும் : காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியிடம் கேட்ட போது,‘‘ சத்தியமூர்த்திபனில் நடைபெறும் ஒழுங்கு நடவடிக்கை குழு திட்டமிட்டபடி கூடும். நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ரூபி மனோகரன் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சத்தியமூர்த்திபவனில் இருந்து எனக்கு தகவல் வந்துள்ளது. நான் எனது சொந்த ஊரில் இருக்கிறேன். சத்தியமூர்த்திபவன் வந்து அந்த கடிதத்தை படித்த பின்பே அடுத்த கட்ட முடிவு எடுக்க முடியும்’’ என்றார்.