×

அண்ணாமலைக்கு எதிராக அரசியல் செய்வேன்: நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி

சென்னை: நான் கட்சியை களங்கப்படுத்தியதாக சொன்னால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக நான் அரசியல் களத்தில் நிற்பேன் என நடிகை காயத்ரி ரகுராம் கூறினார். பாஜவில் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்தவர் நடிகை, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம்.  இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கும், பாஜவை சேர்ந்த சிலருக்கும் மோதல் இருந்து வந்தது. இவர்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தன்னை விமர்சனம் செய்யும் நபர்களை காயத்ரி ரகுராமும், டிவிட்டரில் தாக்கி பதிவிட்டு வந்தார். இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. இந்நிலையில் தான் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக காயத்ரி ரகுராமை 6 மாதம் வரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்தார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழக பாஜ கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ‘நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதனை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் தேசத்துக்காக உழைப்பேன்’ என கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து காயத்ரி ரகுராம் கூறியதாவது:  நான் கட்சிக்கு களங்கம் விளைவிக்கவில்லை. இப்போது கட்சியில் தொண்டராக தான் இருக்கிறேன். கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சிக்கு எதிராக நான் பேசியது இல்லை. தனிப்பட்ட முறையில் என்னை யாரும் டார்க்கெட் செய்தால் அது சாதாரண மனிதராக இருந்தாலும், பாஜவினராக இருந்தாலும் கூட நான் பதிலடி கொடுத்து தான் பழக்கம்.

இந்த பதிலடியின்போது கட்சி சார்ந்தோ, தலைவர் பற்றியோ நான் பேசியது கிடையாது. பெண்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தேன். நான் கட்சியை களங்கப்படுத்தியதாக தெரியவில்லை. இருந்தாலும் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். இது தவறானது. எனது பணியில் நான் உண்மையாகவும், சரியாகவும் இருந்தேன். இதனை மிகவும் உறுதியாக கூறுகிறேன். இது மக்களுக்கும் நன்கு தெரியும். என்னை நீக்கினாலும் கூட தேசத்துக்காகவும், கட்சிக்காகவும் அவர்கள் வேண்டாம் என்று கூறினாலும் தொடர்ந்து பணி செய்வேன். நான் கட்சியில் சும்மா வந்து சேரவில்லை. 8 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறேன். எனக்கு இதுவரை ஷோகாஸ் நோட்டீஸ் வரவில்லை. என்னிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை.

எந்த நடவடிக்கையின் அடிப்படையில் இது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஒன்றும் சொல்வதற்கு இல்லை. என்னை ட்ரோல் செய்தனர். அதற்கு பதிலடி கொடுத்தேன். விசிகவில் இருந்து ட்ரோல் செய்தபோதும் பதிலடி கொடுத்தேன். இப்போது பாஜவுக்கு வந்த புதிய நிர்வாகிக்கு உடனே பதவி கொடுத்தாங்க. செல்வக்குமாரை சுற்றி உள்ளவர்கள் தாக்கி பேசும்போது உடனடியாக பதிலடி கொடுத்தேன். பதிலடி கொடுத்தது தவறு என்றால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எதையும் விசாரிக்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். நான் மக்களுக்காக உண்மையாக சேவையாற்றி வருகிறேன்.

இது தொடரும். கட்சிக்கு களங்கம் விளைவித்தேன் என யார் சொன்னாலும் அவர்களுக்கு எதிராக நான் நிற்பேன். அது அண்ணாமலையாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் சரி. பெண்களை இழிவாக பேசிய சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Gayathri Raghuram , Politics against Annamalai, Actress Gayathri Raghuram,
× RELATED அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்