டிசம்பர் முதல் வாரம் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டிசம்பர் முதல் வாரத்தில் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் நேற்று முன்தினம் வரை விட்டு  விட்டு மழை பெய்தது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் ஓங்கோல் அருகே கரையைக் கடந்து, முற்றிலுமாக வலுவிழந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது மழை நின்றுள்ளது. அதே சமயம், வட தமிழகத்தில் சில இடங்களில் மட்டும் ஆங்காங்கே லேசான மழை பெய்துள்ளது.

இந்நிலையில்,  தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட  வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. நாமக்கல்லில் குறைந்த பட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தஞ்சாவூர்,  நீலகிரி, தர்மபுரி, கோவை, நாகப்பட்டினம், சேலம் மாவட்டங்களில் 2.1 டிகிரி செல்சியஸ் முதல் 4.1 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. பிற மாவட்டங்களில் -2 டிகிரி செல்சியஸ் முதல் 2.0 டிகிரி வரை வெப்பநிலை குறைந்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டமாக காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்றுவரையில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய 317.6 மிமீக்கு பதிலாக 330 மிமீ வரை பெய்துள்ளது. இது  இயல்பைவிட 4 சதவீதம் அதிகம். சென்னையில் இயல்பைவிட கூடுதலாக 16 சதவீதம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்துள்ள நிலையில், 25ம் தேதி அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தம் வடக்கு திசையில் நகர்ந்து கொல்கத்தா கடலோரப் பகுதிக்கு நெருங்கி வலுவிழக்கும். இருப்பினும்,  டிசம்பர் 4ம் தேதி வரை வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும் சூழ்நிலை இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதிக்கு பிறகு அந்தமான் அருகே உருவாகும் ஒரு காற்றழுத்தம் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: