×

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகையை திருத்தங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்: சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில் குறைகள் இருந்ததால், அதில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியை பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ்  டிஜிபி டி.கே.ராஜேந்திரன்,  முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் ஒன்றிய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் இருந்தது. இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இதுவரை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6  பெயர்கள் மட்டுமே உள்ளன.

அமைச்சர் மற்றும் டிஜிபி என்று வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் மற்றும் உயர் அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19ம் தேதி அனுமதி வழங்கியது. இதையடுத்து, 11 பேருக்கு எதிராக சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்த சிபிஐ சிறப்பு நீதிபதி மலர்வாலன்டினா, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்களை இணைத்தும் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Gutka ,CBI , Special court orders CBI in Gutka scam case, supplementary chargesheet
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...