கொலை நகரமாகும் டெல்லி பெற்றோர், சகோதரி, பாட்டியை குத்தி கொலை செய்த வாலிபர்: போதை பொருள் வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்

புதுடெல்லி: டெல்லியில் போதை பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால், பெற்றோர், சகோதரி, பாட்டியை வாலிபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (50). இவரது மனைவி தர்ஷனா. இவர்களுக்கு 25 வயதான கேசவ் என்ற மகனும், ஊர்வசி (18) என்ற மகளும் உள்ளனர். இவர்களின் 75 வயது பாட்டி தீவானா தேவியும் அவர்களுடன் வசித்து வந்தார்.

கேசவ் போதை பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. அவரை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வந்த அவர், வேலைக்கு சென்று வந்தார். அங்கும் பிரச்னையாகவே வேலையை விட்டு விட்டார். அடுத்த சில நாட்களிலேயே கேசவ் மீண்டும் தனது போதை பழக்க முகத்தை காட்டத் தொடங்கினார். போதை பொருள் வாங்க பணம் கொடுக்கும்படி, பெற்றோரிடம் நேற்று முன்தினம் இரவு அவர் கேட்டார். அவர்கள் அதற்கு மறுக்கவே, பயங்கர மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, கேசவ் கொலைவெறி கோபத்துடன்  தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதரியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, தப்பி ஓட முயன்ற கேசவ்வை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.  அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டெல்லி மெஹ்ராலி பகுதியில் ஷர்த்தா என்ற இளம்பெண்ணை, அவருடைய காதலன் அப்தாப் கொலை செய்து 35  துண்டுகளாக வெட்டி வீசியது, தெற்கு டெல்லியில் கல்லூரி  மாணவி ஆயுஷியை சுட்டுக் கொன்று பெற்றோர் ஆணவ கொலை செய்தது என அடுத்தடுத்து நடந்த சம்பவங்களின் சுவடுகள் மறைவதற்குள், மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்தடுத்த கொலைகளால் டெல்லி கொலை நகரமாக மாறி வருகிறதா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories: