×

கோவை, மங்களூரு குண்டு வெடிப்பு; கேரளா லாட்ஜில் தீட்டிய சதி: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பெங்களூரு: கோவை மாநகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள குற்றவாளியுடன் மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஷாரிக் ஒன்றாக கேரளாவில் தங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக முக்கிய குற்றவாளியான முகமது ஷாரிக் பற்றி, மாநில போலீசார், தேசிய புலனாய்வு முகமை ஆகியவை நடத்தி வரும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் கிடைத்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் 13 முதல் 18ம் தேதி வரை கேரளாவில், ஆலுவா ரயில் நிலையம் அருகில் உள்ள ஜெய்தோன் ரூம் என்ற லாட்ஜியில் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஐமோஸ் மோபினுடன் ஷாரிக் தங்கி இருந்ததாகவும். அவர்கள் இருவரும் நடத்திய கூட்டு சதி திட்டத்தை தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி கோவையில் காரில் வெடிகுண்டு சம்பவம் நடந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் லாட்ஜில் இருவரும் தங்கி இருந்தபோது தான் கோவை, மங்களூருவில் வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

மேலும், கேரளாவில் அவர்கள் தங்கி இருந்த லாட்ஜ் புதியதாக கட்டி இருப்பதால், அதில் தங்கிய வாடிக்கையாளர்களின் முழு விவரங்கள் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். லாட்ஜில் தங்கி இருந்தபோது, அவர்களை யாரும் வந்த சந்திக்கவில்லை என்றும் லாட்ஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மோபின்,  ஷாரிக் இருவரும் பலமுறை தனி தனியாக சந்தித்து பேசியதை போலீசார் உரிய ஆதாரங்களுடன் கண்டுப்பிடித்து உள்ளதுடன், கேரளாவில் இயங்கிவரும் சில பழமைவாத அமைப்புகளின் ஆதரவும் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, மைசூருவில் ஷாரிக் செல்போன், கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற கடை உரிமையாளர் பிரசாத்திடம்  போலீசார் நடத்திய விசாரணையிலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது. செல்போன் பழுது பார்க்கும் பயிற்சி என்ற பெயரில் பல செல்போன்கள் வைத்திருந்ததுடன், கம்ப்யூட்டரில் போலியாக ஆதார், பான், தேர்தல் அடையாள அட்டைகள் வடிவமைத்து, அதை ஓரிஜினல் போல், பிரிண்டிங் செய்வதை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூருவில் சதி திட்டம் செயல்படுத்துவதற்கு 2 நாட்களுக்கு முன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, தனது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. புதிய கண்ணாடி வாங்கிய பின் இரண்டு நாட்கள் கழித்து பயிற்சிக்கு வருகிறேன் என்று கூறியதாகவும் போலீசாரிடம் பிரசாத் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

* பேச முடியாத ஷாரிக்
மங்களூருவில் ஆட்டோவில் நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது ஷாரிக்கின் தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் பேச முடியாத நிலையில் உள்ளதாகவும், அவர் குணமான பின், குண்டு வெடிப்பு சதி திட்டம் குறித்து மட்டுமில்லாமல், கேரளா, தமிழகம், மங்களூரு, ஷிவமொக்கா மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் யார் யார் கூட்டாளியாக இருந்தனர். சர்வதேச அளவில் எந்தெந்த தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது உள்ளிட்ட விவரங்கள் சேரிக்க தேசிய புலனாய்வு முகமை, மாநில குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Coimbatore ,Mangalore ,Kerala Lodge , Coimbatore, Mangalore blasts; Kerala Lodge Conspiracy: Police Investigation Reveals Shocking Information
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்