விஜய் ஹசாரே கோப்பை காலிறுதியில் தமிழகம்

ஆலூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழகம் காலிறுதிக்கு தகுதி பெற்றது. நடப்பு தொடரில்   பீகார் உடனான தமிழ்நாட்டின்  முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட, புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் 5 சதம், சாய் சுதர்சன் 3 சதம் விளாச தமிழகம் அபார வெற்றிகளைக் குவித்தது. இந்நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கேரளாவை  எதிர்கொண்ட தமிழ்நாடு முதலில் பந்துவீச...கேரளா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன் குவித்தது.

ரோகன் 39, விஷ்ணு 45, பாசித் 41 ரன் எடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய வத்சல் கோவிந்த் 95, நெடுமான்குழி பாசில் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழகம், தொடக்கத்திலேயே சாய் சுதர்சன் (5 ரன்) விக்கெட்டை இழந்தது. தமிழ்நாடு 7 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன் எடுத்திருந்தபோது  மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜெகதீசன் 23, அபராஜித் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை நின்று, மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 47 ஓவரில் 276 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் மழை பெய்யவே  ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. சி பிரிவில் ஒரு தோல்வி கூட இல்லாமல் 24 புள்ளிகளுடன்  முதல் இடத்தை தொடர்ந்து  தக்கவைத்த  தமிழ்நாடு காலிறுதிக்கு முன்னேறியது. கேரளா (20 புள்ளி) 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

Related Stories: