கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியை தாக்க முயற்சி பாதுகாப்பு குளறுபடி குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை

திருவனந்தபுரம்: கொச்சியில்  கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை பின்தொடர்ந்து சென்று  வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் குறித்து ஒன்றிய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருப்பவர் மணிக்குமார். சென்னையை சேர்ந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு  வாலிபர் பைக்கில் சுமார் 4  கிமீ தூரம் பின்தொடர்ந்து வந்து, திடீரென தலைமை நீதிபதியின் காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டார். தலைமை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியையும் அவர்  தாக்க முயன்றார்.

இதையடுத்து பின்னால் பைலட் வாகனத்தில் வந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து கொச்சி போலீசில் ஒப்படைத்தனர். இது போலீசின் பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது. இது தொடர்பாக ஒன்றிய உளவுத்துறை விசாரணையை  தொடங்கியுள்ளது. கேரள உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை நீதிபதியின் காரை ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து வருவது குறித்து எர்ணாகுளம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஒன்றிய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: