முல்லைப் பெரியாறு விவகாரம் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பாதுகாப்பு கண்காணிப்பு குழுவை  உச்ச நீதிமன்றம் மாற்றி அமைத்து உத்தரவிட்டதோடு, அணை தொடர்பான விவகாரங்களை அக்குழுவிடம் முறையிட வேண்டும் என்றும், இதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை பொருத்தமட்டில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் மனுக்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில் கேரளா அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என தமிழக அரசு தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு செய்யக்கோரி கேரளத்தை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘அணையின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு நடத்தி பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

எனவே புதிய ஆய்வை மேற்கொள்ள முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஒன்றிய நீர் ஆணையத்தின் விதிமுறைகள் உள்ளது. குறிப்பாக கடந்த 2010-2011ம் ஆண்டிற்கு பிறகு பாதுகாப்பு ஆய்வுகள் அணையில் நடத்தப்படவில்லை. எனவே, அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செய்ய மேற்பார்வை குழுவிற்கு உத்தரவிட வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: