10% இடஒதுக்கீட்டை எதிர்த்து சீராய்வு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: ‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கூடுதலாக 10சதவீத இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்’ என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த  2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து யூத்பார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு உள்ளிட்டோர் மனுதாக்கலும், திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாக்கலும் செய்திருந்தனர்.

அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10சதவீத கூடுதல் இடஒதுக்கீடு செல்லும்’ என கடந்த 7ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில் ஐந்தில், மூன்று நீதிபதிகள் பெரும்பான்மையான உத்தரவு பிறப்பித்துள்ளைதை அடுத்து சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய பிரதேச காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்கூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘இடஒதுக்கீடு விவகாரத்தில் சாதிய பாகுபாடு என்பது இருக்கக் கூடாது என்பதால், இந்த விவகாரத்தில் முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறுஆய்வு செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதே விவகாரத்தில் தமிழக அரசும் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Stories: