×

அரசு உதவி பெறும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து 3 கார்கள், பைக் சேதம்

சென்னை: சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் மற்றும் பைக் சேதமடைந்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் 50 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை வழக்கம் போல் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்றனர். மேலும் பள்ளியை சுற்றி சுமார் 15 அடி உயரம், 500 மீ நீளம் கொண்ட சுற்றுச்சுவர் உள்ளது. சென்னையில் பெய்த மழையின் காரணமாக சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டுள்ளது.

பள்ளியின் பின்புறம் இருசப்பன் தெருவின் பக்கம் உள்ள சுமார் 50 மீட்டர் அளவு சுற்றுச்சுவர் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததில் சுற்றுச்சுவரின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஐஸ்ஹவுஸ் மற்றும் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிந்த சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : 3 cars, a bike were damaged when the perimeter wall of the government-aided school collapsed
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...