திருவொற்றியூர் தொகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.3.50 கோடியில் மின்மாற்றிகள்: எம்எல்ஏ கே.பி.சங்கர் திறந்து வைத்தார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில் மின்சார வாரியம் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் புதிய 12 மின்மாற்றிகளை கே.பி.சங்கர் எம்எல்ஏ, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  நேற்று திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு தங்கு தடை இல்லாமல் மின் வினியோகம் செய்யவும் அதற்கு தேவையான உட் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, சென்னை வடக்கு தண்டையார்பேட்டை மின்சார வாரிய கோட்டம், திருவொற்றியூர் சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் தியாகராய புரம், தாங்கல், எண்ணூர், கத்திவாக்கம் பஜார் தெரு, நெட்டுக்குப்பம், காமராஜர் நகர், கிரிஜா நகர், இ.ஐ.டி பாரி பம்ப் ஹவுஸ், சத்தியவாணி முத்து நகர், ஜோதி நகர், மணலி சின்ன சேக்காடு, பல்ஜிபாளையம் உள்ளிட்ட 12 இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ரூ.3.50 கோடி செலவில் 10 மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்), 2 வளைய மின்சுற்று அலகு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் ஜெகதீஷ் குமார் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் உதயசூரியன், கதிரவன் முன்னிலை வகித்தனர். கே.பி.சங்கர் எம்எல்ஏ மின் மாற்றிகளை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். உதவி பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், பிரபாகரன், தினேஷ், அனிதா, முரளி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: