தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல குழு கூட்டம் ரூ.2.68 கோடி திட்டப்பணிகளுக்கு அனுமதி

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 5வது மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் எஸ்.இந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் உள்பட 5வது மண்டலத்திற்கு உட்பட்ட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், தெருவிளக்குகள் பராமரிப்பு, குப்பை அகற்றுவது, சாலை, மழைநீர் கால்வாய்கள் பராமரிப்பு என பல்வேறு கோரிக்கைகளை உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த மண்டலத் தலைவர் டி.காமராஜ் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சிறு மின்விசை தொட்டி, மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி செய்தல், சாலை சீரமைத்தல், வேகத்தடை அமைத்தல், சிறு பாலம் அமைத்தல், எல்.இ.டி மின்விளக்கு அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் என மொத்தம் சுமார் 2 கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 38 தீர்மானங்களுக்கு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. பின்னர், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன் கூறுகையில், அதிமுகவினர் ஐந்தாவது மண்டலத்தில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு கோடியே 30 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு அதிமுக மாமன்ற உறுப்பினர்களின் 47, 65, 66, 69, 70 என ஐந்து வார்டுகளில் மட்டும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அவர்கள் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என கூறி வேண்டுமென்றே வெளிநடப்பு செய்துள்ளனர் என தெரிவித்தார்.

* அதிமுக வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பாக அதிமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை எனவும், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அவற்றை  வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பை கழிவுகள் சரிவர அகற்றுவதில்லை எனவும் குற்றம் சாட்டி மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: