மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனை ரூ.110 கோடியில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி ஆகியோர் நேற்று மாலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் புதிதாக அரசு தலைமை மருத்துவமனை அமைய உள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், குரோம்பேட்டை அரசு தலைமை மருத்துவர் பழனிவேல், காசநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் வினோத்குமார், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், இ.ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் வந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு தேவையான புதிய மருத்துவமனை கட்டிடங்களை மேம்படுத்துவதற்கு, கட்டிடங்களை கட்டுவதற்கு முதல்வர் ரூ.110 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். 2 லட்சத்து 27 ஆயிரம் சதுர அடி பரப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவை சிறப்பாக இருந்து வருகிறது.

தினந்தோறும் 1200 பேரில் இருந்து 1500 பேர் வரை புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாக 200 பேருக்கு மேலும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒருங்கிணைந்த குழந்தை மருத்துவத்திற்கான கட்டிடங்கள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த மருத்துவமனையை மேலும் மேம்படுத்த செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களின் வசதிக்காக செய்து தரப்படும். தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முறையாக தொடங்கி வைக்கப்படும். குரோம்பேட்டை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை மேலும் இரண்டு மாடி கூடுதலாக கட்டுவதற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

* மாயத்தோற்றம் ஏற்படுத்த முயற்சி

அரசின் மருத்துவ சேவையை குறை கூறுவதற்கென்றே ஒரு சிலர் இப்போது புறப்பட்டு இருக்கிறார்கள். ஒரு சிறிய தவறு நேர்ந்து விட்டது என்பதற்காக அரசு மருத்துவ சேவை என்றாலே குறை உள்ளது என்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. நிச்சயம் அது நடக்காது. என்றைக்கோ நடந்த ஒரு தவறை வைத்துக்கொண்டு எந்த ஆபரேஷன் நடந்தாலும் அதற்கு குறை உள்ளது போல் குற்றச்சாட்டுகளை சொல்லி வருவது நாகரிகமாக ஆகி இருக்கிறது. அது தவறானது. அது யாராக இருந்தாலும் திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: