திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எல்லை தெய்வ வழிபாடு நாளை தொடக்கம்: 3 நாட்கள் நடைபெறுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 3நாள் எல்லை தெய்வ வழிபாடு நாளை தொடங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் டிசம்பர் 6ம் தேதி 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாட வீதியில் சுவாமி விதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அளவிலான பக்தர்களே தீபத்திருவிழாவிற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதால் இந்தாண்டு தீபத்திருவிழாவை காண சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டு 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நாளை துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.

 

இதையொட்டி நாளை அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். இரவு 8மணியளவில் சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

அதைதொடர்ந்து நாளை மறுநாள்(25ம் தேதி) அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் பவனி வருவார். தொடர்ந்து 26ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெறும். இதையடுத்து 27ம் தேதி கொடியேற்றத்துடன் தீபத்திருவிழா தொடங்கும்.

வாழை இலையில் மட்டுமே அன்னதானம்: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 27 பொது இடங்கள் மற்றும் 157 தனியாருக்கு சொந்தமான இடங்கள், மண்டபங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அன்னதானம் வழங்க விரும்புவோர் வரும் 26ம் தேதிக்குள் முன் அனுமதி பெற வேண்டும். திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் உரிய அனுமதி பெறலாம். மேலும், இணையதள முகவரியில் விண்ணப்பித்தும் அனுமதி பெறலாம்.  

பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப்பாதையில் இருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய் தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்கக்கூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. உணவு கழிவு பொருட்களை போடுவதற்கு குப்பை தொட்டிகளை தயாராக வைக்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தை தூய்மையாக வைக்க வேண்டும். அன்னதானம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: