×

உசிலம்பட்டி அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான நெடுங்கல் கண்டுபிடிப்பு: 400 ஆண்டு பழமையான நடுகல்லும் கிடைத்தது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நெடுங்கல் கண்டறியப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியில் உள்ள செல்லங்கருப்புசாமி கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், கோயிலில் சுமார் 7 அடி உயரத்துடன் உள்ள நெடுங்கல் இன்றளவும் வழிபாட்டில் இருந்து வருவதையும், கோயிலின் பின்பகுதியில் பட்டவன் சாமி என்ற நடுகல் சுமார் 3 அடி அகலம், இரண்டு அடி உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதையும் கண்டறிந்தனர்.

தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், ‘‘நெடுங்கல் வழிபாடு சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. உருவ வழிபாடுகளுக்கு முன்பாக இனக்குழுவின் தலைவன் ஞாபகமாக இந்த நெடுங்கல் வழிபாடு இருந்து வருகிறது. பழங்கால மனிதர்கள் நெடுங்கல் அமைத்து வழிபடும் முறை தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி, மானூத்து மாலைக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான நெடுங்கல் வழிபாட்டு முறைகள் இன்றளவும் இருந்து வருகிறது.
 
தமிழகத்தின் தருமபுரி, ஈரோடு பகுதிகளில் காணப்படும் 7 அடிக்கும் மேலான உயரமான நெடுங்கல்லை போன்று, செல்லங்கருப்புசாமி கோயிலில் 7 அடி உயரத்துடன் நெடுங்கல் உள்ளது. இதேபோல் இதன் அருகில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான புடைப்புச் சிற்பத்துடன் கூடிய நடுகல் அமைத்துள்ளனர். இதில் ஆயுதங்கள் இல்லாமல் தலைவன், இடது பக்கம் ஒரு பெண், வலது பக்கம் இரண்டு பெண் உள்ளனர். பொதுவாக ஆயுதம் ஏந்தியபடி காணப்படும் நடுகல் பரவலாக கிடைக்கிறது.

இங்கு ஆடையலங்காரத்துடன் காணப்படும் சிற்பங்கள் கைகளில் மலர் மற்றும் கலசங்கள் ஏந்தியபடி அமைத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள இந்த பகுதியில் 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனித சமூகம் வாழ்ந்து வந்ததற்கான தடயங்களாக இவை உள்ளன’’ என தெரிவித்தார்.



Tags : Uzilimbatti , 3,000-year-old Nedungal found near Usilambatti: 400-year-old middle stone also found
× RELATED உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு