×

திருப்பத்தூர் நகராட்சியில் உரம் தயாரிக்கும் இயந்திரம் பழுதால் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் மூலம் தினந்தோறும் 7.5டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை பஉச நகர் பகுதியில் 10 ஏக்கரில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. தற்போது இந்த குப்பை மலைபோல் தேங்கியுள்ளது.

இதையடுத்து நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ₹பல கோடி ெசலவில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கிடங்குகள் நகராட்சி அலுவலகம், பெரியார் நகர், கலைஞர் நகர், ஜார்ஜ் பேட்டை உள்பட 5 இடங்களில் அமைக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்து, அதனை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஓராண்டாக இந்த கிடங்குகளில் உள்ள இயந்திரங்கள் பழுதாகி, பயனற்ற நிலையில் உள்ளது.  இதனால் நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. விவசாயிகளுக்கும் உரம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில், நகராட்சி சார்பில் குப்பையில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரை உரம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன் பழுதாகியுள்ள உரம் தயாரிக்கும் இயந்திரங்களை விரைவாக சீரமைத்து நகரில் ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவும், அந்த குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுயிர் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupattur Municipality , Garbage piled up like a mountain after composting machine broke down in Tirupattur Municipality: People demand action
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...