×

போலி இணையதளத்தை உருவாக்கி வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைனில் பணத்தை சுருட்டும் கும்பல்: சேலம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சேலம்: ஆன்லைன் முதலீடு பண மோசடி வழக்குகளில் வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து மோசடி கும்பல் கைவரிசை காட்டியிருப்பது சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்தவர் மருத்துவர் கிருபாகரன் (40). இவரது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு கடந்த மாதம் ஒரு மெசேஜ் வந்தது.

அதில், ‘ஆன்லைன் டிரேடிங் பிசினஸ் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்’ என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி, அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்த இணையதளத்திற்கு சென்று பல்வேறு தவணைகளில் ரூ.80.50 லட்சம் பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்தார். ரூ.1.90 லட்சம் லாப தொகையாக திரும்பி வந்த நிலையில், ரூ.78.60 லட்சம் திரும்பி வரவில்லை. மர்ம நபர்கள் சுருட்டியது தெரியவந்தது.

இதுபற்றி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், கிருபாகரன் புகார் செய்தார். விசாரணையில், போலியான இணையதளம் மூலம் ஆன்லைன் முதலீடு என பணத்தை பெற்று மோசடி கும்பல் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், இம்மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த சைதலவி கூட்டலுங்கல் (50) என்பவரை கைது செய்து ரூ.38 லட்சத்தை மீட்டனர். மேலும், டெல்லியை சேர்ந்த சவுரவ்தாகூர் (23) என்பவரை கைது செய்து ரூ.5 லட்சத்தை மீட்டனர்.

தொடர் விசாரணையில், இம்மோசடியில் பெரிய நெட்வொர்க் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலியான ஆன்லைன் முதலீடு இணையதளத்தை ஏற்படுத்தி, அவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை பெற்று மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது. கிருபாகரன் இழந்த தொகையில் இன்னும் ரூ.35.60 லட்சத்தை மீட்க நடந்த விசாரணையில், போலீசார் அதிர்ச்சியடையும் வகையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, இந்த ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள் அனைத்தும் வட மாநிலத்தை சேர்ந்த நபர்களிடம் இருந்து ஒருநாள், 2 நாள், ஒரு வாரம் என வாடகைக்கு பெறப்பட்டவை என்பதை கண்டறிந்துள்ளனர். சில வாலிபர்களின் வங்கி கணக்கை குறிப்பிட்ட தொகையை கொடுத்து ஒருசில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, அந்த கணக்கை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடும் நபர்கள், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வாங்கி கொண்டு, ஒதுங்கி விடுகின்றனர். ஒவ்வொரு வங்கி நடவடிக்கையின்போதும் (பணம் செலுத்துதல், எடுத்தல்) வரும் மெசேஜ் மற்றும் ஓடிபி விவரங்களை அந்த வாடகை நாட்களுக்கு மட்டும் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டு, பல லட்சங்களை சுருட்டியுள்ளனர். இப்படி வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்ட சிலரை பிடித்து விசாரித்தனர். அதன்மூலமே கேரளா, டெல்லி நபர்கள் சிக்கியுள்ளனர். இன்னும் சிலரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆன்லைன் மோசடியில் ஈடுபடும் நபர்கள், தங்களது சொந்த வங்கி கணக்கை பயன்படுத்துவதில்லை. ஒரு சில நாட்களுக்கு மட்டும் உ.பி., ஒடிசா, பீகார், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களை சேர்ந்த நபர்களின் வங்கி கணக்குகளை வாடகைக்கு எடுத்து கைவரிசை காட்டுகின்றனர். எதிர்பார்த்த பணம் கிடைத்தவுடன், அந்த போலி இணையதளத்தை முடக்கிவிட்டு, வாடகை வங்கி கணக்கையும் ஒப்படைத்து விட்டு தப்பி விடுகின்றனர்.

பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, எனது வங்கி கணக்கை ‘ஹேக்’ செய்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற பதிலோடு முடியும். அதனால், இத்தகைய சம்பவங்களில் தீவிரமாக விசாரித்தபோதுதான், வங்கி கணக்கை வாடகைக்கு விடுவதை கண்டறிந்துள்ளோம். தற்போது வங்கி கணக்கை வாடகைக்கு விடும் நபர்களையும் சேர்த்து கைது செய்யும் பணியை தொடங்கியிருக்கிறோம்,’’ என்றனர்.

அனைத்து மோசடியிலும் வாடகை வங்கி கணக்கு: ஆரம்பகாலத்தில் அதிகமாக எழுந்த புகாரான வங்கி ஏடிஎம் கார்டு மோசடி முதல் சமீபகாலமாக நடக்கும் ஆன்லைன் கடன் ஆப் மோசடி, பரிசு பொருட்கள் விழுந்திருப்பதாக நடக்கும் மோசடி, மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்தை வெளியிட்டு நடக்கும் மோசடி, ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடி என அனைத்திலும் மோசடி கும்பல் பயன்படுத்தும் வங்கி கணக்குகள், வாடகைக்கு பெறப்பட்டவையாகவே இருக்கிறது. மோசடியாளர்களின் செல்போன் தொடர்பு எண், வங்கி கணக்கு எண் என அனைத்தும், மோசடிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதனால், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகள், மெசேஜ்களுக்கு மக்கள் யாரும் பதிலளிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Salem ,Cybercrime Police , Gangs create fake website and rent bank accounts to launder money online: Salem cyber crime police probe reveals shocking information
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...