ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்..!

சென்னை : ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்த போது வலியுறுத்தியதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்பட பல்வேறு கோரிக்கைகளை ஆளுநரிடம் முன் வைத்ததாக தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து ஆளுநருடன் பேசியதாகவும், அதற்கான தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி ஒன்றிய அரசு வழங்கிய உள்ளாட்சி நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். ஆளுநர் உடனான இந்த சந்திப்பின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், ஜெயக்குமார், எம்.பி., சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

Related Stories: