கடலில் மாயமான மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண உதவி: கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்

திருவொற்றியூர்: கடலில் மாயமான மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரண உதவியை  கே.பி.சங்கர்  எம்எல்ஏ வழங்கினார். தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பெனாயிராஜ் (42). மீனவர். இவரது மனைவி ரோஸி. இவர்களுக்கு சபாஸ்டின் (16), ஜான்சன் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  

பெனாயிராஜ் கடந்த 9.10.2021  அன்று சக மீனவர்களுடன் விசை படகில் நடுக்கடலில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து மாயமானார். இதனால் அவரது மனைவி 2  பிள்ளைகளுடன் வருமானமின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தார். கடலில் மாயமான மீனவரின் உடல் கிடைத்திருந்தால் அவரது குடும்பத்தாருக்கு அரசு நிவாரண நிதி கிடைத்திருக்கும். ஆனால் காணாமல்போய்விட்டால் 7 ஆண்டுக்கு பிறகுதான் அரசின் நிவாரணம் கிடைக்கும் என்ற விதி உள்ளது.

இதுகுறித்து கேள்விப்பட்ட திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், கணவனை இழந்து வறுமையில் வாடிய அவரது குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த நிதியாக ஒரு லட்சம் கொடுத்துள்ளார். மேலும் பெனாயிராஜ் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் உடனடியாக வழங்கவேண்டும் என மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.

மேலும் கடலில் மாயமாகும் மீனவர் குடும்பத்துக்கு 7 ஆண்டு வரை காத்திருக்காமல் 2 ஆண்டுக்குள் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என சட்டமன்றத்தில் கே.பி.சங்கர் எம்எல்ஏ முதல்வரிடம் கோரிக்கை வைத்து சட்டதிருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனிடையே, கடலில் மாயமான பெனாயிராஜ் குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நிவாரணம் பெற்ற ரோஸி, மகன்களுடன் கே.பி.சங்கர் எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Related Stories: