மின்கம்பி அறுந்ததால் திருமால்பூர் ரயில் நிறுத்தம்; விரைவு ரயிலாக இயக்கப்படும் என அறிவித்ததால் பயணிகள் மறியல்: செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பரபரப்பு

செங்கல்பட்டு:  இடி, மின்னல், காற்றில் காஞ்சிபுரம்-திருமால்பூர் இடையே  மின்கம்பி அறுந்ததால் திருமால்பூர் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து விரைவு ரயில் இயக்கப்படும் என அறிவித்ததால் ரயில் பயணிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். சமாதான பேச்சுக்கு பின் ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் கலைந்து சென்றனர்.  இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை திருமால்பூரில் இருந்து மின்சார ரயில் சென்னை கடற்கரைக்கு புறப்பட்டது. இதனிடையே, இடி, மின்னல், பலத்த காற்று வீசியதால் காஞ்சிபுரம்-திருமால்பூர் இடையே  மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.

இதனால் திருமால்பூர் மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. திருமால்பூரில் இருந்து மின்சார ரயில் வராததால், செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் இருந்து 8.10 மணிக்கு சாதாரண மின்சார ரயில் விரைவு ரயிலாக மாற்றப்பட்டு இங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சாதாரண ரயிலாக இயக்கவேண்டும் என கூறி திடீரென பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள், பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சாதாரண ரயிலாக இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்படி சாதாரண ரயிலாக  இயக்கப்பட்டது. அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அரை மணி பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், “சாதாரண மின்சார ரயில் என்றால் அனைத்து ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். விரைவு ரயில் என்றால் முக்கியமான ரயில்நிலையத்தில்தான் நிற்கும்.  இதனால் எங்களுக்கு சிரமம் ஏற்படும். பஸ் பிடித்துதான் வேலைக்கு செல்ல முடியும்” என்றனர்.

Related Stories: