மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19வது நினைவு தினம்: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை..!!

நாகை: மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 19வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகை மாவட்டம் திருகுவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில், முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது முரசொலி மாறன் 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றி பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவின் சாதகமான நிலைகளுக்காக போராடியவை என்று புகழாரம் சூட்டப்பட்டது.

தஞ்சை கலைஞர் அறிவாலயம் மற்றும் திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சிதம் அம்மையார் நினைவிடத்தில் திமுகவினர் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழுப்புரத்தில் முரசொலி மாறனுக்கு மரியாதை செலுத்திய திமுகவினர், அவரது புகழ் பாடி முழக்கங்கள் எழுப்பினர். கும்பகோணத்தில் திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனின் உருவ படத்திற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.

வேலூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, பட்டுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் முரசொலி மாறனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சேலம் அருகே முரசொலி மாறன் மற்றும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் உருவ படத்திற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்:

தில்லியில் திராவிடத்தின் முகம்; உலக அரங்கில் இந்தியாவின் முகம்; வளரும் நாடுகளின் சார்பில் வல்லரசுகளோடு வாதிட்ட திறனாளர்; அத்தனைக்கும் மேலாக கலைஞரின் மனசாட்சி!

முரசொலி மாறன் அவர்களின் நினைவுநாளில் அவர் நினைவைப் போற்றுகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: