மண்டபம் முகாமில் இருந்து இரு பச்சிளங்குழந்தைகளுடன் 8 பேர் இரவில் வெளியேற்றம்

ராமநாதபுரம் : மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் இருந்து 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 8 பேர் இரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கை, தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த 2006ம் ஆண்டில் மனைவி, 3 மகன்கள், 3 மகள்களுடன் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் தங்கினார். 2013, மே 27ல் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா செல்ல முயன்றபோது மங்களூருவில் பிடிபட்டனர். கார்த்திகேயன் மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது குடும்பத்தாரின் பதிவு ரத்து செய்யப்பட்டது. உயரதிகாரிகளின் அறிவுறுத்தல்படி, கார்த்திகேயன் தவிர எஞ்சிய 7 பேரின் பெயர் மீண்டும் முகாமில் பதிவு செய்யப்பட்டு உதவித்தொகை, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கும்மிடிபூண்டி முகாமை சேர்ந்த தன்ராஜ் என்பவருடன், கார்த்திகேயனின் இளைய மகள் துர்காவுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து மண்டபம் முகாமில் துர்காவின் பதிவு துண்டிக்கப்பட்டது. மற்றவர்கள் மண்டபம் முகாமிலேயே தங்கியுள்ளனர். தன்ராஜின் தம்பி சரண்ராஜ் மனைவி சினேகா, பிரசவத்திற்கு மண்டபம் முகாம் வந்து துர்காவின் தாயார் ரோஸ்மேரி வீட்டில் தங்கினார். இவருடன் பிரசவத்திற்காக 20 நாள் அனுமதி பெற்று, சினேகாவின் கணவர் சரண்ராஜ், துர்கா, இவரது கணவர் தன்ராஜ் மற்றும் 4 மாத பெண் கைக்குழந்தை உட்பட 3 மகள்களும் வந்திருந்தனர்.

சினேகாவுக்கு கடந்த 5 நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் அனைவருக்கும் 20 நாள் அனுமதி முடிவடைந்தது. இதனால் பதிவின்றி தங்கியிருந்த துர்கா, தன்ராஜ், இவர்களது 3 மகள்கள், சினேகா, சரண்ராஜ், பிறந்த குழந்தை ஆகிய 8 பேர் இரவில் வெளியேற்றப்பட்டனர். இதனால் அவர்கள் மண்டபம் முகாம் பஜாரில் இரவில் மூடிய கடையின் வெளிப்பகுதியில் காத்திருந்தனர்.

இதுகுறித்து துர்கா கூறுகையில், ‘‘முகாமில் எனது கொழுந்தன் மனைவி பிரசவத்திற்கு 20 நாள் அனுமதி பெற்று தான் தங்கினோம். கெடு முடிந்ததால்,

 நேற்று காலை கும்மிடிப்பூண்டி புறப்பட இருந்தோம். தனித்துணை கலெக்டர் வீட்டில் வேலை பார்த்த எனது தாயாரின் சம்பள பிரச்னையால் வெளியேற்றியது கவலை அளிக்கிறது. நீக்கப்பட்ட என் பெயரை மீண்டும் பதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: