குன்னூர் : உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக கோத்தகிரி லாங்வுட் சோலை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள லாங்வுட் சோலை சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள அற்புதமான பசுமை மாறாக்காடு ஆகும். சுமார் 25 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவதுடன் பல்லுயிர்ச் சூழல் மையமாகவும் உள்ளது.
உலகின் தலைசிறந்த பசுமை மாறா காடாக அறிவிக்கப்பட்டு, காமன்வெல்த் நாடுகளின் ‘குயின்ஸ் கனோபி’ என்ற இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை அங்கீகாரம் கோத்தகிரி லாங்வுட் சோலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு உலகளாவிய அங்கீகாரம் ஆகும்.‘குயின் காமன்வெல்த் கனோபி’ என்ற பெயரில் ராயல் காமன்வெல்த் சொஸைட்டி என்ற அமைப்பின் மூலம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, லண்டனில் உள்ள ராயல் காமன்வெல்த் சொஸைட்டியின் தலைமை நிர்வாகம் மூலம் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.