கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகாளஹஸ்தியில் சொர்ணமுகி ஆற்றிற்கு மகா தீபாராதனை-திரளான பக்தர்கள் திரண்டனர்

ஸ்ரீகாளஹஸ்தி : கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீகாளஹஸ்தியில் சொர்ணமுகி ஆற்றிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் திரண்டனர்.

திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அருகே உள்ள சொர்ணமுகி ஆற்றிற்கு ஆண்டுதோறும் புஷ்கரம் நடத்துவது வழக்கம். ‘ஜல ஆரத்தி’  எனப்படும்  காசியில் கெங்கை நதியை போற்றும் வகையில் மாலை பொழுதில் எடுக்கும் மகா தீபாராதனையை போல் இங்கு சொர்ணமுகி ஆற்றிற்கு மகா தீபாராதனை எடுக்கப்படும். அதன்படி, நேற்று மாத சிவராத்திரி என்பதாலும், தெலுங்கு கார்த்திகை மாதத்தின் இறுதி நாள் என்பதாலும் மாலை 7 மணி முதல் மகா தீபாராதனைகளை  கோயில் வேத பண்டிதர்களால் நடத்தப்பட்டது.

இதற்காக, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழு ஒருங்கிணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தி அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து 100க்கணக்கான பக்தர்கள் மகா ஆரத்தி காண்பதற்காக பக்தர்கள் திரண்டு வந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தது. கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சொர்ணமுகி (கங்கா நதி ஆரத்திகள்)  கடந்த 2 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தொடர்ந்து, இவ்வாண்டு முதல் இனி வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று தொகுதி எம்எல்ஏ மதுசூதன் தெரிவித்துள்ளார்.

மாலை 7 மணிக்கு தொடங்கிய சொர்ணமுகி ஆரத்தி நேரம் 9 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. முன்னதாக, கோயில் வேத பண்டிதர்கள் சொர்ணமுகி ஆற்றிற்கு சாஸ்திர பூர்வமாக சிறப்பு பூஜைகள் நடத்தினர். சொர்ணமுகி  ஆற்றில் நெய் தீபங்களை விட்டனர். ஆற்றில் தண்ணீர் செல்கையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க நதியை வேண்டினர்.

ஒவ்வொரு மழை காலத்தின் போதும்  அமைதியாக நீர் செல்ல வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

விவசாய பயிர்கள் நன்றாக விளைந்து விவசாயிகளை  சந்தோஷமடைய வேண்டும். கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து பெண் பக்தர்கள் ஆற்றில் கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.  இதில் எம்எல்ஏ மதுசூதன், சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: