×

நீலகிரியில் உறை பனி கொட்டியது-குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ்

ஊட்டி :  ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று உறை பனி கொட்டத்துவங்கியது. குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதால் கடுங்குளிர் வாட்டியது.  
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் 2-வது  வாரம் வரை பெய்யும். அதன்பின் டிசம்பர் மாதம் துவக்கம் வரை நீர் பனி காணப்படும். டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறை பனி விழும். இந்த சமயங்களில் நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள புல் மைதானங்கள், காய்கறி செடிகள் மற்றும் தேயிலை செடிகளில் உறை பனி கொட்டி கிடக்கும்.

தேயிலை, மலை காய்கறிகள் விவசாயம் பாதிக்கும். அதிகாலை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளை நிற கம்பளம் விரித்தார் போல் புல்வெளிகள் காட்சியளிக்கும். டிசம்பர் மாதம் விழும் பனியால் பெரும்பாலான தேயிலை செடிகள், புல் மைதானம், காய்கறி செடிகள் கருகி விடும். இதனை காக்க தென்னை ஓலைகள், தாவை எனப்படும் செடிகள் மற்றும் வைக்கோல்கள்களை போட்டு விவசாயிகள் பயிர்களை காத்து வருவது வழக்கம்.

இந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் மழை பெய்த நிலையில், தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் துவக்கத்திலேயே நீர் பனி விழத்துவங்கியது. கடந்த இரு நாட்களுக்கு மேலாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் லேசான உறை பனி விழத்துவங்கியுள்ளது. அப்பர்பவானி, அவலாஞ்சி, தலைகுந்தா, கிளன்மார்கன், பைக்காரா, எச்பிஎப், சூட்டிங்மட்டம் மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் உறை பனியின் தாக்கம் காணப்பட்டது.

பனிப்பொழிவு அதிகரித்ததால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் நீடிக்கிறது. துவக்கத்திலேயே உறை பனி கொட்டத் துவங்கியுள்ளது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஊட்டியில் பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும், ஊட்டியில் குளிர் உணரப்பட்டது. தாழ்வான பகுதிகள், அணைகள் மற்றும் நீரோடைகள் அருகே பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் அங்கு குளிரின் தாக்கம் சுற்று அதிகமாக காணப்படுகிறது.

நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. இந்த வெப்பநிலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பதிவானது. தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் 1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Nilgiris , Ooty: Snow fell in Ooty and surrounding areas yesterday. It was bitterly cold as the minimum temperature was recorded at 1 degree Celsius.
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...