×

அனல் பறக்கும் சட்டமன்ற தேர்தல் களம்: குஜராத்தில் பாஜக போட்டி வேட்பாளர்கள் 12 பேர் சஸ்பெண்ட்.. தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதால் நடவடிக்கை..!!

காந்திநகர்: குஜராத் சட்டமன்றத்துக்கான முதற்கட்ட தேர்தலுக்கு ஒருவாரமே எஞ்சியுள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளில் போட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ள பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கால் நூற்றாண்டுக்கு மேலாக குஜராத்தை பாரதிய ஜனதா தன்வசம் வைத்திருக்கும் நிலையில், அம்மாநிலத்திற்கு 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் 89 தொகுதிகளுக்கு நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப்பெறுதல் ஆகியவை முடிந்திருக்கும் நிலையில், முதற்கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மீ என குஜராத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 இடங்களிலும் ஆளும் பாஜக தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு எஞ்சிய 179 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் என்பவர் வேட்புமனுவை திரும்ப பெற்றுவிட்டதால் அக்கட்சி 2 இடங்களில் மட்டுமே களம் காண்கிறது.

ஆம் ஆத்மீ கட்சியும் 182 இடங்களில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சூரத் கிழக்கு தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் தனது மனுவை திரும்ப பெற்றதால் ஆம் ஆத்மீ 181 இடங்களில் பந்தயத்தில் இருக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 இடங்களில் 35 தொகுதிகள் பருச், நர்மதா, தபி, டாங், சூரத், நவுசாரியா ஆகிய தெற்கு மாவட்டங்களில் பரவியுள்ளன. இதனால் முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த மாவட்டங்களை முற்றுகையிட்டு அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேட்ச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த 12 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் 6 முறை எம்.எல்.ஏ. வாக இருந்த மது ஸ்ரீவத்சன் மற்றும் பட்டேல், தாவத்சின் லாலா ஆகிய முன்னாள் எம்.எல்.ஏக்கள் அடங்குவர். இதையடுத்து குஜராத் தேர்தல் தொடர்பில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போட்டி வேட்பாளர்கள் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.


Tags : BJP ,Gujarat , Assembly Elections, Gujarat, BJP Contesting Candidates, Suspended
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...