பழநி பாலசமுத்திரத்தில் ரூ.9.62 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்-ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பழநி : பழநி அருகே பாலசமுத்திரத்தில் ரூ.9.62 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு பாலாறு- பொருந்தலாறு அணையில் இருந்து குடிநீர் பெறப்பட்டு வந்தது. இக்குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

 இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். இதன் பயனாக குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ..62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் நாளொன்றிற்கு 19 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

  இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று காணொலி மூலம் துவக்கி வைத்தார். பழநி அருகே பாலசமுத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது, திமுக ஆட்சியில் அரசின் கடன் தொகைகள் குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 1.5 ஆண்டு ஆட்சியில் வட்டித்தொகை ரூ.4 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.

 திமுக ஆட்சிக்கு வந்த 17 மாத காலத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி 2 ஆயிரத்து 400 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. பழநி பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் பாலாறு- பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.

   இன்னும் 1 மாத காலத்தில் கூட்டுறவுத்துறை மூலம் தமிழகத்தில் தகுதியான 4 பேருக்கு பணிகள் வழங்கப்பட உள்ளன. பழநி- கொடைக்கானல் ரோப்கார் திட்டம் டெல்லியில் சென்று நேரில் வலியுறுத்தியதால் தற்போது சாத்தியமாகி உள்ளது. விரைவில் பழநி மலை- இடும்பன் மலை இடையே ரோப்கார் அமைக்கப்பட உள்ளது. பழநி வையாபுரி குளம் சுற்றுலா மையமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், சுவாமிநாதன், மாவட்ட துணை செயலாளர் பிலால், பேரூர் செயலாளர்கள் சோ.காளிமுத்து, அபுதாகீர், பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சுப்புராமன், கவுன்சிலர்கள் தங்கலட்சுமி, முருகேஸ்வரி, மாவட்ட விவசாயி அணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ரஞ்சித்குமார், எஸ்கேஆர் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணிய துரைராஜா, முன்னாள் பேரூர் செயலாளர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: