×

பள்ளி வாகனங்களில் சென்சாருடன் கேமரா அமைக்க வேண்டும்-வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவுரை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இந்த பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக 364 வேன் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகிறது. பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என கடந்த ஜூன் மாதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  
 அப்போது, பெரும்பாலான வேனின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில், குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா? என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா?, 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்பதை குறித்து கேட்டறிந்தும், பஸ்சில் இருக்கை, மேல் பலகை, வேகக்கட்டுப்பாடு கருவி, அவசரகால வழி, முதலுதவி சிகிச்சை பெட்டி உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

 இந்நிலையில், பள்ளி வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில், மாணவர்களை ஏற்றி இறக்கும் போது, ஏதேனும் அசம்பாவிதனம் ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களின் உள்ளே சிசிடிவி கேமரா வைத்திருந்தாலும், வாகனம் இயக்கும்போது ஒரே நேரத்தில் வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்திலும் கேமராக்களின் செயல்பாடு இருக்க வசதி ஏற்படுத்துவதுடன், 2 மீட்டருக்குள் வாகனத்தின் அருகே செல்பவகளை அறிய சென்சார் அமைக்க வட்டார போக்குவரத்துதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த சில நாட்களில் சுமார் 90க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருபுறமும் கேமரா மற்றும் சென்சார் அமைக்கப்பட்டது. மாணவர்களின் வசதிக்காக தனியார் பள்ளி வாகனங்களில் இருபுறமும் அமைக்கப்பட்ட கேமராக்களையும், சென்சார் செயல்பாட்டையும் நேற்று, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர்  ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வாகனத்தை இயக்கி, கேமரா மற்றும் சென்சார் செயல்பாடு, எவ்வாறு உள்ளது என தெரிந்து கொண்டார்.

 இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில்,‘பள்ளி வாகனத்திற்குள் மாணவர்கள் ஏறி, இறங்குவதை கண்காணிக்க கேமரா அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவர்களின் பாதுகாப்பு கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில், வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் கேமரா மற்றும் சென்சார் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், வாகனத்தின் முன்னும், பின்னும் மாணவர்கள் யாரேனும் தெரியாமல் நின்றால், கேமராவில் பதிவானவற்றை சிறிய அளவிலான திரையில் காண்பதுடன், ‘பீப்’ என்ற சத்தத்துடன் எச்சரிக்கை விடுக்கம். இதன் மூலம், மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வாய்ப்பாக உள்ளது.

  தற்போது, சில வாகனங்களில் அந்த செயல்பாட்டை முழுமையாக்கியுள்ளனர். இருப்பினும், மீதமுள்ள வாகனங்களில் கேமரா மற்றும் சென்சார் அமைப்பு உள்ளிட்டவை ஏற்படுத்த 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குள், அனைத்து பள்ளி வாகனங்களிலும் முன், பின்னும் சென்சாருடன் கேமரா அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் வாகன உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : District Transport Officer , Pollachi: More than 65 private schools are functioning in Pollachi, Kinathukadavu, Anaimalai, Valparai and other areas.
× RELATED சிவகங்கை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு