சிறையில் டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சொகுசு வாழ்க்கை: பழங்கள், சூடான உணவுகளை அமைச்சர் சாப்பிடும் புதிய வீடியோ வெளியீடு..!!

டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி வரும் சூழலில் தற்போது அதை நிரூபிக்கும் விதமாக, அவர் பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டு ஓய்வெடுக்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. டெல்லி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோத பணமோசடியில் ஈடுபட்டதாக கடந்த மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமின் கோரி 2 முறை மனுதாக்கல் செய்தும் உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே வழக்கு தொடர்பான விசாரணையின்போது சிறையில் ஜெயினுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் ஜெயினின் உடல் எடை 28 கிலோ வரை குறைந்திருப்பதாகவும் கூறினார். இதனை பொய் என்று நிரூபிக்கும் விதமாக ஜெயின் சிறையில் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களையும், ஊட்டச்சத்துமிக்க உணவுகளையும் சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது தவிர குடிப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும், அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் உள்ள ஜெயின் மசாஜ் செய்துக்கொள்ளும் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதற்கு ஆம் ஆத்மி விளக்கம் அளித்தும், மசாஜ் செய்தவர் அதே சிறையில் உள்ள பலாத்கார குற்றவாளி என திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. தற்போது புதிய வீடியோ வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

Related Stories: