×

மழை மற்றும் நீர்வரத்து குறைந்ததால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: மழை படிப்படியாக குறைந்ததால், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் வருவது  குறைந்தது. இதனால், இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலையான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டியது.

இதனால், கடந்த 2ம் தேதி முதல் 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து 3000 கன அடியாக அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், சில நாட்களாக மழை குறைந்துள்ளதால் ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. இதன் காரணமாக புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 100 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மழை குறைவு மற்றும் நீர்வரத்து குறைவு  காரணமாக புழல் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 11  மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2530 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீருக்காக, வினாடிக்கு 159 கன அடி நீர் அனுப்பபட்டு வருகிறது. நீர் வரத்து குறைந்ததால் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்து தண்ணீர் அதிகமாக வரும் பட்சத்தில் உபரிநீர் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும்,’’ என்றார். இதேபோல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியில் இருந்து முதலில் 500 கன அடியாகவும், பிறகு 1000 கன அடி வரையும் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சரிவர மழை பெய்யாததால், ஏரிக்கு நீர்வரத்து 111 கன அடியாக குறைந்தது. இதனால் வரும் கோடை கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது நேற்று முழுமையாக நிறுத்தப்பட்டது. தற்போது ஏரியில் மொத்தம் 19.54 அடி தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இனி மழை பெய்தால் மட்டுமே ஏரி நீர் திறந்து விடப்படும். அதுவரை இதே அளவில் தண்ணீர் தக்க வைக்கப்படும் என்று ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரி முழுவதும் தண்ணீர் நிறைந்து கடல் போல் காட்சியளிக்கும் அழகை அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினமும் நேரில் வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.

ஏரிகளின் நீர் மட்டம்  
* பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 1963 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வரத்துக் கால்வாய்கள் மூலமாக 365 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* புழல் ஏரியில் நேற்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2509 மில்லியன் கன அடி நீர் உள்ளது. வரத்துக் கால்வாய் மூலம் நீர்வரத்து 46 கன அடி‌யாக உள்ளது. சென்னை மக்களுக்காக 292 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.   
* சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 418 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வரத்துக் கால்வாய் மூலம் நீர்வரத்து 10 கன‌அடியாக உள்ளது.  
* செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 2491 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மற்றும் மழை நீர் என 365  கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 260 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
* கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags : Chembarambakkam ,Puzhal ,Water Resources Department , Rainfall and water flow reduced, Chembarambakkam, Puzhal Lake, Surplus water supply stopped
× RELATED புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு