×

ஹாட்ரிக் வெற்றியுடன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா: ஹெட், வார்னர் அபார சதம்

மெல்போர்ன்: இங்கிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 221 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. எம்சிஜி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸி. அணி தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 38 ஓவரில் 269 ரன் சேர்த்தது. வார்னர் 106 ரன் (102 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட் 152 ரன் (130 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஸ்டோன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். ஆஸி. 42.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 292 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக 2 ஓவர் குறைக்கப்பட்டு தலா 48 ஓவர்கொண்ட போட்டியாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதன் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் 12, ஸ்மித் 21, மிட்செல் மார்ஷ் 30 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 48 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோன் 4, லாவ்சன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, டி/எல் விதிப்படி 48 ஓவரில் 364 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 31.4 ஓவரில் 142 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

ராய் 33, வின்ஸ் 22, மொயீன், லாவ்சன் தலா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். டேவிட் வில்லி 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4, கம்மின்ஸ், அபாட் தலா 2, ஹேசல்வுட், மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. டிராவிஸ் ஹெட் ஆட்ட நாயகன் விருதும், வார்னர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Tags : Australia ,England ,Warner , Hat-trick win, Australia whitewashed England, Head, Warner's great century
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை