×

3வது போட்டி ‘டை’ தொடரை வென்றது இந்தியா

நேப்பியர்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 3வது டி20 போட்டி டி/எல் விதிப்படி சரிசமனில் (டை) முடிந்ததை அடுத்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. வெலிங்டனில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 65 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து 19.4 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கான்வே 59 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), பிலிப்ஸ் 54 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4 ஓவரில் 17 ரன்னுக்கு 4 விக்கெட், அர்ஷ்தீப் 4 ஓவரில் 37 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தினர். ஹர்ஷல் 1 விக்கெட் எடுத்தார்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 9 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இஷான் 10, பன்ட் 11, சூரியகுமார் 13, ஷ்ரேயாஸ் (0) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் ஹர்திக் 30 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தீபக் ஹூடா 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாத நிலையில், டி/எல் விதி கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி இந்தியா 9 ஓவரில் 76 ரன் எடுத்திருந்தால் வெற்றி என்ற நிலையில், 1 ரன் குறைவாக இருந்ததால் ஆட்டம் சரிசமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்தியா 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை வசப்படுத்தியது. ஆட்ட நாயகனாக சிராஜ், தொடர் நாயகனாக சூரியகுமார் தேர்வு செய்யப்பட்டனர். இரு அணிகளும் அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் காலை 7.00 மணிக்கு தொடங்குகிறது.

Tags : India , 3rd match, series won by India,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...