×

 காற்றழுத்தம் வலுவிழந்து ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றதால், தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கியது. இதுவரை இரண்டு முறை வங்கக் கடலில் காற்றழுத்தங்கள் உருவாகியும் புயலாக மாறாமல் வெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கடந்து சென்றன. இருப்பினும், அவற்றின் மூலம் தமிழகத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய இயல்பு மழையை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்தம் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து நேற்று முன்தினம்  மாலையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்தது. இதனால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. அதனால் தெற்கு ஆந்திரப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

வட தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, கர்நாடகா வழியாக வட மேற்கு திசையில் பயணித்து மேலும் வலுவிழந்தது. இந்த நிகழ்வின் காரணமாக தமிழகப் பகுதியில் பெரிய அளவில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழை பெய்யாமலே பொய்விட்டது. இதற்கிடையே, வங்கக் கடல் பகுதிக்கு கிழக்கு திசையில் இருந்து வீசும் குளிர்அலையுடன் கூடிய காற்றின் காரணமாக கடல் மட்டத்தில் ஈரப்பதம் நீடிப்பதால், இன்று முதல் 26ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Meteorological Department , Tamil Nadu will receive light rain as the depression moves towards Andhra Pradesh: Meteorological Department
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...