அரசு கேபிள் டிவி நிறுவன சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும்: காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு ஐகோர்ட்உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக, அரசு கேபிள் சேவையில் 2 நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகி ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முறையீடு ஒன்றை முன் வைத்தார். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனமான காஸ்பல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கட்டணம் செலுத்துவது தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால்  மத்தியஸ்தர்  மூலமே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் உள்ளது. ஆனால் அதையும் மீறி கேபிள் சேவை துண்டித்துள்ளது.

எனவே வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என  கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு  நீதிபதி அவசர வழக்காக விசாரித்தார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவிந்திரன்,  பிரச்னையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க வேண்டும், கேபிள் சேவை துண்டித்து இடையூறு செய்வது சட்டவிரோதம், எனவே கேபிள் சேவையை இடையூறு இல்லாமல் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டணம் குறித்து மத்தியஸ்தர் மூலமா தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்தியஸ்தர் மூலம் 90 நாளுக்குள் தீர்வு காண வேண்டும் என கூறிய நீதிபதி அரசுக்கு கேபிள் டிவி சேவையை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் என்று தனியார் மென்பொருள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: