×

தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்: சமூக வலைதளத்தில் சர்ச்சை பதிவு; அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் நடவடிக்கை

சென்னை: தமிழக பாஜவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைத்தள பதிவு, அண்ணாமலைக்கு எதிரான பேச்சால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜவில் இணைந்த பிரபல நடிகை காயத்ரி ரகுராமுக்கு உடனடியாக கலை, கலாசார பிரிவில் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதல் பெறாமல், கலை, கலாசார பிரிவில் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றம் செய்தார். சிறிது நேரத்தில் அவர் அறிவித்த பட்டியல் செல்லாது. பழைய நியமனங்கள் அப்படியே இருக்கும் என்று அண்ணாமலை அறிவித்தார். இதனால் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே முதன் முதலாக மோதல் உருவானது. அப்போது முதல் காயத்ரி ரகுராம் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பாஜவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில் பாஜ ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா மற்றும் பாஜ சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் ஆகியோர் பேசும் காணொலியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் சூர்யா சிவாவுக்கு பதவி வழங்கியது தவறு என்று கூறி பாஜ தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரி ரகுராமுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வார்த்தை போர் தொடங்கியது. இதற்கிடையில், தான் இத்தனை வருடமாக கட்சியில் இருந்தும், ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் சொந்த கட்சியினரே சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து வருவது குறித்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் முடிவதற்குள் காயத்ரி ரகுராம் புதிய சர்ச்சையை கிளப்பினார். அதாவது காசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் விழாவிற்கு என்னை அனுமதிக்கவில்லை. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தும் கூட வெளிமாநிலத்தில் நடக்கும் தமிழ் தொடர்பான நிகழ்வில் தன்னை அனுமதிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக தனது ஆதங்கத்தை டிவிட்டரில் வெளிப்படுத்தினார்.

அந்த பதிவில், ‘சில சமயங்களில் சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வரும். என்னைப் பற்றியும் எனது வேலையைப் பற்றியும் நான் வருத்தப்பட்டேன் என்று சொன்னதற்காக ட்ரோல் செய்யப்பட்டேன். அதுவும் ஒரு விசுவாசி குழு, பெரும்பாலும் கட்சி ஆதரவாளர்கள் மட்டுமே’’ என்று பதிவிட்டு இருந்தார். இது விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த மோதல் முற்றியதை தொடர்ந்து நேற்று காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பாஜவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

* என்னிடம் பேசுபவர்களை தடுக்க முடியாது: காயத்ரி ரகுராம் ஆவேசம்
கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதம் நீக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘‘நன்றி அண்ணாமலை ஜி. 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள், அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

* திருச்சி சூர்யா மீது நடவடிக்கை
பாஜ தலைவர் அண்ணாமலை ெவளியிட்ட மற்றொரு அறிவிப்பில், ‘‘தமிழக பாஜ சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று என் கவனத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கனக சபாபதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதுவரை சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்.

* வீடியோ மற்றும் ஆடியோவால் சிக்கும் பாஜ பிரமுகர்கள்
பாஜவில் அண்மை காலமாக வீடியோ, ஆடியோ பேச்சால் பிரமுகர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சர்ச்சை வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பாஜ தலைவர் ஒருவர் சிக்கினார். அந்த சம்பவம் அனைத்து தரப்பிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் போன் உரையாடலில் பாஜ பிரமுகர் ஒருவர், பெண் நிர்வாகியிடம் தகாத வார்த்தைகளால் பேசி சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜவினர் அதிர்ந்து போய் உள்ளனர். இப்படி வீடியோ, ஆடியோ விவகாரத்தில் சிக்கி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார்களே என்று கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள், தொண்டர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர். வீடியோ, ஆடியோ விவகாரத்தை தொடர்ந்து தொலைபேசியில் பேசவே பாஜவினர் சிலர் பயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Tags : Kayatri Raguram ,Tamil Nadu Baja ,Anamalai , Removal of actress Gayathri Raghuram from Tamil Nadu BJP: l Controversy registered on social media l Action taken for anti-Annamalai speech
× RELATED தமிழ்நாட்டில் கூட்டணியை அதிமுக...