20,000 பள்ளிகள் மூடல்; 2.8 லட்சம் ஆசிரியர்கள் வாழ்க்கை காலி படிப்பும் போச்சு... வேலையும் போச்சு... பத்து பாத்திரம் தேய்க்கும் மாணவிகள்; ஒன்றிய அரசால் எதிர்காலம் கேள்விக்குறி

இளைஞர்கள் கையில் நாட்டை ஒப்படையுங்கள். இந்தியா வல்லரசு நாடாகும்’ என்று மறைந்த மக்களின் ஜனாதிபதியும், இளைஞர்களின் கனவு நாயகனுமான அப்துல் கலாம் தெரிவித்தார். ஆனால், இன்றைய நிலைமையோ வேறு. பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, முனைவர் பட்டம் என பெயருக்கு பின்னால் நிறைய பட்டங்களை போட்டாலும், வேலை கிடைக்காமல் திரியும் நிலைதான் நம் நாட்டில் உள்ளது. இது ஒருபக்கம் இருக்க, கடந்த ஓராண்டில் மட்டும் 20,000 பள்ளிகள் மூடல் மற்றும் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பால் கல்வியே எட்டாக்கனியாக மாறி உள்ளது.

கல்வி, சுகாதாரம் நாட்டின் இரண்டு கண்களாக பார்க்கப்படுகிறது. நோயற்ற வாழ்வு, தரமான மருத்துவம், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, இதெல்லாம் மக்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை, ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஓட்டை வாங்கி விட்டு அதிகாரத்தில் அமர்ந்த பிறகு, ஏழை, எளிய மக்களின் உழைப்பை சுரண்டி, வரி வாங்கி கஜானாவில் போடுவது மட்டும் ஒன்றிய அரசு வேலை இல்லை. மக்களிடம் வரியை வாங்குவதே மக்களுக்கு சேவை செய்யதான். இலவச கல்வி, தரமான மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள், எந்தவித தடையின்றி வழங்க வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. ஆனால், இவை எதுவுமே மூலை முடுக்கில் உள்ள எந்த கிராமத்துக்கும் சென்றயடைவில்லை. ஏன், நகரத்திலேயே இவை கிடைப்பதில்லை.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, பாஜ ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக வாக்குறுதி அளித்தார். பாஜ ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகி உள்ளது. இதுவரை 16 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், நிர்வாக குளறுபடி போன்ற பல்வேறு காரணங்களால் பல லட்சம் பேர் வேலையிழந்ததுதான் மிச்சம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருப்பதால், சமீபத்தில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.

முதலில் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய அவர், நேற்று 71,000 பேருக்கு இரண்டாம் கட்டமாக பணி நியமன ஆணை வழங்கினார். இது, பாஜவின் ‘தேர்தல் ஸ்டன்ட்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்த பணி நியமன ஆணைகள் எந்த தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று ஒன்றிய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைதூக்கி உள்ள நிலையில், இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரே ஆண்டில் 20,000 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால், மாணவிகள் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலைக்கும், மாணவர்கள் கூலி வேலைக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பின் உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம்தான் சிறந்து விளங்குகிறது என்று பெருமை கொள்ளும் ஒன்றிய அரசு, நாட்டினுடைய எதிர்காலத்துக்கு முதுகெலும்பாக உள்ள கல்வியை மேம்படுத்துவதில் கோட்டை விட்டு விட்டது. கொரோனா ஊரடங்கால் தொழிற்சாலைகள் மூடல், வேலையிழப்பு போன்ற காரணங்களால் ஏழை, எளிய குடும்பங்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட்டனர். இலவச அரிசி வழங்கினாலும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

இதனால், அந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்திவிட்டனர். ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சர்வ சிக்க்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்க்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தாலும், இடைநிற்றல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகள் மூடல் மற்றும் இடைநிற்றல் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை ஒப்புக் கொண்டு உள்ளது.

* 2020-21ம் ஆண்டில் நாட்டில் 15.09 லட்சம் பள்ளிகள் இருந்தன. 2021-22ம் ஆண்டில், 14.89 லட்சம் பள்ளிகள் மட்டுமே உள்ளன. கடந்தாண்டில் மட்டும் 20,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

* 2021-22ம் ஆண்டில் ஆரம்பப் பள்ளி மாணவர் சேர்க்கை 11.5 லட்சமாக (10%) குறைந்து உள்ளது.

* 2020-2021ம் ஆண்டில் நாட்டில் 97.87 லட்சம் ஆசிரியர்கள் இருந்தனர். 2021-22ம் ஆண்டில் 95.07 லட்சமாக குறைந்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2.8 லட்சம் குறைவு.

* ஆசிரியர் எண்ணிக்கை குறைவு தனியார் பள்ளிகளில் 2.94%, மற்ற வகை பள்ளிகளில் 8.3%, அரசு பள்ளிகளில் 0.9%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1.45%.

* 2018-19ம் ஆண்டில் 41.1 லட்சமாக இருந்த ஆசிரியைகள் எண்ணிக்கை, 2021-22ல் 48.77 லட்சமாக அதிகரித்துள்ளது.

* 2018-19ம் ஆண்டில் 47.2 லட்சமாக இருந்த ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 2021-22ல் 46.3 லட்சமாக குறைந்து உள்ளது.

* புதிய தேசிய கல்விக் கொள்கையின் இலக்கின்படி 2030ம் ஆண்டிற்குள் பள்ளி அளவில் 100 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைய ஒன்றிய அரசு விரும்புகிறது. இதற்கு இடைநிறுத்தம் ஒரு தடையாக உள்ளது. - இதுதான் ஒன்றிய அரசு தெரிவித்தது.

இடைநிற்றலுக்கு முக்கிய காரணமே வறுமை, படிப்பில் ஆர்வம் இல்லாதது, குழந்தை திருமணம், பள்ளிக்கு வெகு தூரம் செல்ல வேண்டியது போன்ற காரணங்கள்தான். நாட்டில் தற்போது 42 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 8 ஆண்டுகளில் 28 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த வறுமையால் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளது. வடமாநிலங்களில் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பாஜ ஆளும் மாநிலங்களில்தான் மாணவர்கள் பள்ளியை தொடர முடியாமல் பாதியில் ஓட்டம் பிடிக்கின்றனர். குறைந்த தேர்ச்சி விகிதமும் இங்குதான் உள்ளது. பள்ளி படிப்பை உதறும் வடமாநில மாணவர்கள், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வேலை தேடி வருகின்றனர். இதேபோல், வடமாநிலங்களில் இன்ஜினியரிங், மருத்துவம் போன்ற உயர் படிப்புக்கான உள்கட்டமைப்பு, தரம் போன்றவை இல்லாததால், தமிழகத்துக்கு மாணவர்கள் படையெடுக்கின்றனர்.

இந்த நிலைமையில் அனைத்து மேற்படிப்புக்கும் நுழைவுத்தேர்வு வேறு. இதனாலும் பலர் உயர் கல்வியை தொடர முடியாமல், தலைவிதி என்று வேலைக்கு செல்கின்றனர். இரட்டை இன்ஜின் அரசால் பல மாநிலங்களில் வளர்ச்சியை ஏற்பட்டுள்ளதாக கூறும் பாஜ, அங்கு கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. மாணவர்கள் சேர்க்கையில் முன்னேற்றம் கண்டாலும் பள்ளிகள் மூடல், இடைநிற்றல் அதிகரிப்பு களைய ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவார் என்று ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...’ என்பது மாறி, மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா, இடைநிற்றல் இல்லாத இந்தியா உருவாக்கப்படுமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். - கல்வி என்பது அனைவருக்கும் வழங்க வேண்டிய அடிப்படை உரிமை. அது, அவர்களின் சொத்து.    

யார் யார்? எதனால்?

* கட்டணம் செலுத்த முடியாமல் 16% மாணவர்களும், 20% மாணவிகளும் பள்ளியை பாதியில் விட்டு செல்கின்றனர்.

* 13% மாணவிகள், 10% மாணவர்கள் வீட்டு வேலைக்கு செல்வதால் படிப்பை பாதியில் விட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

* 7% மாணவிகள், 0.3 மாணவர்கள் திருமணம் செய்து கொண்டதால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை.

* குடும்பத்தின் அணுகுமுறை குழந்தையின் பள்ளி இடைநிற்றல் விகிதத்தில் ஒரு பங்கை வகிக்கிறது.

* கடன் செலுத்துவதற்காக 6% மாணவர்கள், 2.5% மாணவிகள் பள்ளியை விட்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

* 4.4% மாணவர்களும், 2.3% மாணவிகளும் தங்கள் பண்ணை அல்லது குடும்பத் தொழிலுக்காக வேலை செய்ய வேண்டியிருந்தது.

* 5% மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர சீட் கிடைக்கவில்லை.

* தொடர் தோல்வி காரணமாக 5% மாணவர்கள், 4% மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை.

* மேற்படிப்பு அவசியமில்லை என கூறி 4% மாணவர்கள் தொடரவில்லை.

* சரியான வசதிகள் இல்லாதது (1.7%), பெண் ஆசிரியர் இல்லாதது (0.2%), பாதுகாப்புக் கவலைகள் (2%) ஆகியவை மாணவிகள் வெளியேறுவதற்கான பிற காரணங்கள்.

* 0.2% பேர் தாங்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என காரணமே தெரியாது என கூறி உள்ளனர்.

* 1 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தாங்கள் உடன்பிறந்தவர்களைக் கவனிப்பதற்காக அல்லது இயற்கை பேரிடர்/பேரழிவு காரணமாக பள்ளியை விட்டு வெளியேறி உள்ளனர்.

* நாட்டில் உள்ள பள்ளிகள் 14.89 லட்சம்

* மாணவர்கள் எண்ணிக்கை 25.57 கோடி

* மொத்த ஆசிரியர்கள் 95.07 லட்சம்

* இடைநிற்றல் 14.6%

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் 42 கோடி பேர்

* படிப்பில் ஆர்வம் இல்லாதது மாணவர்கள் 35.7% ,மாணவிகள் 21.4%

* மாநில வாரியாக இடைநிற்றல்

நாட்டில் 2020-21ம் ஆண்டின் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 14.6 சதவீதமாக உள்ளது. இதேபோல், ஆரம்ப கல்வி மற்றும் உயர்கல்வி முடித்தவர்கள் மேற்படிப்பை தொடர முடியாமல் பாதியில் விட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மாநிலம்    இடைநிற்றல்

பீகார்    21.4%

குஜராத்    23.3%

மத்திய பிரதேசம்    23.8%

ஒடிசா    16.04%

ஜார்க்கண்ட்    16.6%

திரிபுரா    26%

கர்நாடகா    16.6%

ஆந்திரா    8.7%

உத்தரப் பிரதேசம்    11.9%

மேற்கு வங்கம்    15%

அசாம்    30%

நாகாலாந்து    30%

கேரளா    7.1%

உத்தரக்காண்ட்    8.41%

கோவா    10.17%

* குறைந்தபட்சம் 45 அதிகபட்சம் 2.5 லட்சம்

நாட்டில் குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 45 பள்ளிகளும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.5 லட்சம் பள்ளிகளும் உள்ளன. மொத்தமுள்ள 15 லட்சம் பள்ளிகளில் 20 ஆயிரம் பள்ளிகள் இந்தாண்டில் மூடப்பட்டுள்ளன.  29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் எண்ணிக்கை பின்வருமாறு (குறிப்பு: இந்த எண்ணிக்கை 20 ஆயிரம் பள்ளிகள் மூடுவதற்கு முன்)

மாநிலம்

யூனியன் பிரதேசம்    பள்ளிகள் எண்ணிக்கை

1. அந்தமான்    414

2. ஆந்திரா    62,702

3. அருணாச்சல் பிரதேசம்    4,047

4. அசாம்    71,042

5. பீகார்    84,236

6. சண்டிகர்    201

7. சட்டீஸ்கர்    53,781

8. தாத்ரா, நகர் ஹவேலி    347

9. டாமன் டையூ    145

10. டெல்லி    5,755

11. கோவா    1,554

12. அரியானா    22,315

13. இமாச்சல்    18,039

14. ஜம்மு காஷ்மீர்    29,092

15. ஜார்கண்ட்    48,528

16. கர்நாடகா    75,489

18. கேரளா    17,130

19. லட்சத்தீவு    45

20. மத்திய பிரதேசம்    1,50,762

21. மகாராஷ்டிரா    1,07,624

22. மணிப்பூர்    4,993

23. மேகாலயா    14,514

24. மிசோரம்    3,825

25. நாகாலாந்து    2,826

26. ஒடிசா    70,300

27. புதுச்சேரி    731

28. பஞ்சாப்    28,988

29. ராஜஸ்தான்    1,08,428

30. சிக்கம்    1,279

31. தமிழ்நாடு    57,583

32. தெலங்கானா    42,632

33. திரிபுரா    4,844

34. உத்தரப் பிரதேசம்    2,55,969

35. உத்தரகாண்ட்    24,026

36. மேற்கு வங்கம்    95,736

25 சதவீத மாணவிகளுக்கு திருமணம்

* யுனிசெப் அறிக்கையின்படி, 33% மாணவிகள் வீட்டு வேலைக்காகவும், 25% மாணவிகள் திருமணம் செய்வதற்காகவும் பள்ளி படிப்பை பாதியில் விட்டு செல்கின்றனர்.

* பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் தொழிலாளர்களாகவும் அல்லது வீடுகளில் வேலை செய்வதை பல இடங்களில் காண முடிந்தது.

என்ன செய்யலாம்

* கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கண்டறிய வேண்டும்.

* இடைநிற்றல் மற்றும் கல்வி அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் ஆசிரியர்-பெற்றோர் அளவிலான கூட்டத்தை மாதம் ஒருமுறையாவது நடத்த வேண்டும்.

* இடைநிற்றல் மாணவர்கள் கண்டறிந்து அவர்கள்து வீட்டிற்கு சென்று, கல்வி அவசியத்தை குறித்து எடுத்துரைத்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பெற்றோர் அலட்சியம்

பொதுவாக, ஒன்று அல்லது இரண்டு வகுப்பில் தோல்வியடைந்த பிறகு, குழந்தை படிப்பில் ஆர்வத்தை இழக்கிறது. பெரும்பாலும், இந்த குழந்தைகள் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோர்கள் கல்விக்கு மதிப்பளிக்கவில்லை என்றால், அது குழந்தையின் படிப்பில் உள்ள ஆர்வத்தை பாதிக்கும்.  அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இடைநிற்றல் விகிதங்களைக் குறைக்க உதவியுள்ளன. ஆனால் இடைநிற்றல் தடுத்து பள்ளியை தொடர மேம்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை. இலவச மற்றும் அணுகக்கூடிய கல்வியை வழங்குவதில் இருந்து உதவித்தொகை மற்றும் எழுதுபொருட்கள், சீருடைகள் போன்றவற்றை வழங்குவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இந்தியாவின் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் ஆர்வமின்மை இன்னும் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

தமிழகத்தில் 1.90 லட்சம் மாணவர்கள் மீண்டும் சேர்ப்பு

* திமுக ஆட்சிக்கு வந்தபின் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 1.90 லட்சம் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 16,530 மாணவர்கள், செங்கல்பட்டில் 10,082 மாணவர்கள், சென்னையில் 9,785 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சமாக பாதியில் படிப்பை நிறுத்திய மானவர்கள் 10,11,12ம் வகுப்பு சேர்ந்தவர்கள்தான்.

* 11ம் வகுப்பு-43,058, 10ம் வகுப்பு - 5,240, 12ம் வகுப்பு - 1,115 மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தி உள்ளனர்.

* விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, மதுரை, சேலம் உட்பட 13 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளனர்.

* கடந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேராத 777 மாணவ, மாணவிகளை கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை தமிழக பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளது.

* காஷ்மீரில் மீண்டும் பள்ளிக்கு செல்லும் 14,000 பேர்

ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 27ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை நடைபெற்ற அரசு உதவித் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் அருண்குமார் மேத்தா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 4வது கட்டமாக 13,977 இடைநிறுத்தப்பட்டவர்கள் தங்கள் பள்ளிகளில் மீண்டும் சேர்ந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘13,977 பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டதன் மூலம், தரமான கல்வி உறுதியானது. இது, மிகப்பெரிய சாதனையாக விளங்குகிறது’ என்று தெரிவித்தனர்.

காரணம் என்ன?

* குடும்ப வறுமை

* கட்டணம் செலுத்த முடியாதது

* பல கி.மீ தூரம் பள்ளிக்கு செல்வது

* படிப்பில் ஆர்வம் இல்லாதது

* வீட்டு வேலைக்கு செல்வது

* குழந்தை திருமணம்

* கடன் பிரச்னை

Related Stories: